பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரம்
2019 முதல் காலாண்டில் 3.7 வீத பொருளாதார வளர்ச்சி
2019 முதல் காலாண்டில் 3.7 வீத பொருளாதார வளர்ச்சி
2015ஆம் ஆண்டு தொடக்கம் வெள்ளம், ஆட்சிக் கவிழ்ப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனப் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மையுடன் பேணியுள்ளோம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,
இந்த இடைக்கால கணக்கறிக்கை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கானது.
கடந்த ஆண்டு 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மறுநாள் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. அதன் காரணமாக மீண்டும் நாம் அந்த சதியை தோற்கடித்து ஆட்சிக்குவந்ததும் இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பித்தோம். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தான் 2019ஆம் ஆண்டுக்காண வரவு – செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் நாம் சந்தித்துள்ளோம். 2016, 2017ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எமது சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சிகண்டது.
என்றாலும், மிகவும் குறுகிய காலத்தில் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளோம். மிகவும் குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தியுள்ளோம்.
சஞ்சாரக பொட்டோ போன்ற சலுகைகளை ஹோட்டல் துறையினருக்கு வழங்கினோம்.
இவ்வாறு பல்வேறு சவால்களுக்கும், நெருக்கடிக்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் முகங்கொடுத்துதான் நாட்டின் பொருளாதார்ததை நிலைநிறுத்தி 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
அரச துறையினரின் சம்பளத்தை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளோம். 2005ஆம் ஆண்டு முதல் அரச சேவையாளர்களுக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு சதத்தைக்கூட அதிகரிக்க வில்லை.
கல்விசார் ஊழியர்களின் சம்பளத்தை 100ற்கு 190 சதவீதம் அதிகரித்துள்ளோம்.
பொலிஸாரின் சம்பளத்தையும் பாரிய அளவில் அதிகரித்துள்ளோம். 67ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளோம்.
அடுத்தாண்டு ஜனவரி மாதமளவில் அரச சேவையாளர்கள் எதிர்பாராதளவு சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளோம்.
அதேபோன்று விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். உலகில் வளர்ச்சிக்கண்ட நாடுகளில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. கல்விக்கும், சுகாதார சேவைக்கும் பாரிய நிதியை எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காதவகையில் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
அரச வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு கைத்தொழில் வளர்ச்சிக்கண்டுள்ளது என்றார். (Thinakaran)