ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம்; அரச நிர்வாக சேவையினரின் போராட்டம் இடைநிறுத்தம்
கடமைக்கு திரும்பாவிடின் கடும் நடவடிக்கை
அரச நிர்வாக சேவை மற்றும் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டங்களுக்கு முடிவு காணும் முகமாக விசேட அமைச்சரவை உப குழுவிற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
அரச துறை ஊழியர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு முதன்முறையாக தொழிற்சங்கங்களை சந்திக்கிறது.
இன்று பி.ப 3 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க, ரயில்வே ஊழியர்கள் போராட்டம் அநீதியானது.
அவர்கள் சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கிணங்க போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். எவராக இருந்தாலும் போராடுவதற்கு முன்பு அரசாங்கத்துடன் தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதுடன் கடிதமொன்றைகூட எமக்கு அனுப்பவில்லை.
இவர்களது போராட்டம் தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும். ரயில்வே, ரயில்வே சாரதிகள் , கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் போன்றவர்களின் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒன்றரை இலட்சம் சம்பளத்தை பெறுகின்றனர். அதிகமாக மூன்று இலட்சம்வரை சம்பளம் பெறுகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டாவிடின் மக்களை பஸ்களில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பணிக்கு திரும்புமாறு ஏற்கனவே உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ள சூழலில் இன்றுமுதல் பணிக்கு திரும்பாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம் என்றார்.
இதேவேளை ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடவிடம் இதுகுறித்து வினவிய போது, இன்றைய தினம் அமைச்சரவை உப குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் கலந்துகொள்ளவுள்ளோம்.
என்றாலும் அரசாங்கம் உரிய தீர்வை வழங்க முன்வராவிடின் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்போம் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர . உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார , பொது நிருவாக அமைச்சர் வஜிர அபேவர்தன, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோரை உள்ளடக்கிய விசேட அமைச்சரவை உபக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அரச துறை ஊழியர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்த அமைச்சரவை உபக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் என பல அரச துறைசார் ஊழியர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடனும் அமைச்சரவை உபக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. (Thinakaran)