ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட நியமனங்களை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறித்துள்ளதைத் தொடர்ந்து தேசிய கொள்கை, பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வழப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட செயற்றிட்ட உதவியாளர்கள் நியமனம் பெற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அறிவித்தலைத் தெடர்ந்து செயற்றிட்ட உதவியாளர்கள் என்ற பதவிப் பெயருடன் நியமனம் பெற்ற 7500 பேருக்கும் மாவட்ட செயலகங்கள் வேலையைப் பொறுப்பேற்பதை மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கின்றர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 16 ஆம் திகதி இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் இணைக்கப்பட்டள்ளனர். இவர்கள் குறித்த மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்டனர். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாவட்ட செயலகங்கள் இந்த செயற்றிட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நியமனக் கடிதம் பெற்றிருந்தும் பட்டதாரிகள் வேலைற்றிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 200 பட்டதாரிகள் இவ்வாறு நியமனம் பெற முடியாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.