சம்பிரதாய பூர்வ தொழில்கள் தொடர்பாக கனவு கண்டு கொண்டிருக்காமல் எதிர்கால தொழிலுகு தொடர்பாக அறிந்து அவற்றின் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி நகரும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கல்விப் புலத்தில் மிக முக்கிய அடைவாகக் கருதப்படும் இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் கொடுப்பனவொன்றை வழங்கி வைக்கும் வங்கிக் கணக்கு புத்தகத்தை வினியோகிக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் நடைபெற்றது.
உயர் தரத்தில் தொழில் துறையொன்றில் இரண்டு வருடகாலம் பயிற்சி பெறும் 240 நாட்களுக்கான வருகைக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்கப்படுகின்றது. இதன்படி ஒரு மாணவருக்கு 120,000 ரூபாய் மொத்தக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. 2019 ஆண்டு மாத்திரம் அரசு இதற்காக 540 மில்லியன் ரூபாய்களைச் செலவிடுகின்றது.
இதன் முதற்கட்டமாக உயர் தரத்தில் 1545 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக 6100 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் போதிய பெறுபேறு பெறாவிட்டாலும் உயர் தரத்தில் 26 விசேட தொழில் துறை பாடங்களைத் தெரிவு செய்து கற்று தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற என்விகியு மட்டம் 4 சான்றிதழையும் பரீட்சைத் திணைக்களத்தின் Advanced Certificate in Vocational Education தொழில் கல்வியில் உயர் சான்றிதழையும் பெற்று் கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சர் விளக்கினார்.
இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாகயம் கலாநிதி ஜயந்தி குணசேகர மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.