16800 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,800 பட்டதாரி களுக்கு இன்று (30) பிரதமர் தலைமையில் நியமனம் வழங்கப்படுகிறது.ஏனைய நியமனங்கள் ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னர் வழங்ககப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களினால் நியமனம் வழங்கப்படுகிறது.இன்றைய தினம் மொத்தமாக களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1760 பட்டதாரிகளுக்கும் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 1840 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுகிறது.களுத்துறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கும் ஏனைய 22 மாவட்டங்களில் இருந்து 40 பேர் வீதம் 880 பேருக்கும் ஏனைய பட்டதாரிகளுக்கும் ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் திகதிகளில் நியமனம் வழங்குமாறு பிரதமர் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். 16,800 நியமனங்களின் போது வெளிவாரி பட்டதாரிகள் 880 பேருக்கும் நியமனம் வழங்கப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
பிரதமரின் கீழ் இருக்கும் தேசிய கொள்கை,பொருளாதார விவகாரம் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு என்பவற்றுக்கே இந்த நியமியமனங்கள் வழங்கப்படும் இதே வேளை, பல்கலைக்கழகங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆராயப்பட்டது.இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. நாடுபூராவும் உள்ள 14 உபவேந்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள். பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துதல், அவற்றின் சுயாதீனத்தை உறுதி செய்தல், பட்டப்பின்படிப்பு, ஆங்கில கல்வி, உப வேந்தர்களின் வகிபாகம் என்பன குறித்தும் இங்கு முக்கியமாக ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் உடல் உள மற்றும் சைபர் வதைகள் குறித்தும் அவற்றை தடுக்கும் வழிவகைகள் பற்றியும் இங்கு கவனம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சமூகத்திற்கு தமது கல்வி செயற்பாடுகளை உகந்த சூழலில் மேற்கொள்வதற்கு அவகாசம் வழங்குதல் நவீன உலகிற்கு ஏற்றவாறு பல்கலைக்கழகங்களை மாற்றுவதன் அவசியம் என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பெரேரா, பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் உபுல் திசானாயக்க, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் நஜீம் உட்பட 14 உப வேந்தர்கள் இதில் கலந்து கொண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். (Thinakaran)