ஆசிரியர்களின் நலன்களை அதிகரிப்பதில் இன்றைய அரசு கூடிய கவனம் செலுத்தி வந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எமது காலத்தில் பெருமளவு சம்பள உயர்வும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 28,000உயர்ந்த சம்பளமாக இருந்த நிலை மாறி முதற்தர ஆசிரியர்களின் சம்பளம் 81,000ரூபா வரை அதிகரிப்பதற்கான வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி தொகுதியின், கொடகம, மானாவை வித்தியாலயத்தில் நிருமாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தொகுதிகள் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சம்பள பிரச்சினைகள் உட்பட ஆசிரியர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில், வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நிலையை பாழ்ப்படுத்துவதற்கு எந்தத்தேவையும் ஆசிரியர்களுக்கு இருக்காது.
அடுத்த மாதம் தொடக்கம் உயர்தர மாணவர்களுக்குக் கணனி ெடப்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இத்திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டு கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்சமயம் விஷேட ஆசிரியர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும 2030ஆம் ஆண்டாகும்போது தொழில்நுட்ப கல்வி முழுமை பெறுவதால் மனித ஊழியம் வெகுவாக குறைவடைந்து தொழில் இழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை தோன்றும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். (Thinakaran)