சப்ரகமுவ மாகாணத்தில் 66பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (24) சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் முகமாகவே இந்த ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்த மாவட்டங்களில் குறித்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கட்டாயம் ஐந்து வருடங்கள் சேவையாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.