16,800 பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பயிலுனர் பட்டதாரிகளாக பயிற்சியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி; தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்; என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் 20,000பட்டதாரி பயிலுனர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதில் ஏற்கனவே 3,200 பட்டதாரி பயிலுனர்கள் 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 16,800 பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பயிலுனர் பட்டதாரி;களாக பயிற்சியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
16,800 பட்டதாரிகளும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நியமிக்கப்படவுள்ளனர்.
நியமனக் கடிதங்கள் கட்டம் கட்டமாக ஜூலை 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளிலும் ஓகஸ்ட் முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளிலும் மாவட்ட மட்டத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் பட்டதாரி பயிலுனர்களாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
பட்டம் வழங்கப்பட்ட திகதி உள்ளடங்கலான காரணிகளை கருத்தில் கொண்டு முன்னுரிமைப்படுத்தலின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பயிலுனர் காலப்பகுதியில் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக ரூபா 20,000 வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின்போது நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு ஒரு வருடகால பயிற்சி பெற்றுக்கொள்வது கட்டாயமானது ஆகும்.
இவர்களுக்கான முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜூலை 30 ஆம் திகதி வழங்கப்படும்.
16,800 பட்டதாரி பயிலுனர்களில் வடமாகாணத்தில் 1907பட்டதாரிகளும் (யாழ்ப்பாணம் 1,277, கிளிநொச்சி 141, மன்னார் 160, முல்லைத்தீவு 129, வவுனியா 200) கிழக்கு மாகாணத்தில் 1,142 பட்டதாரிகளுமாக (அம்பாறை 686, மட்டக்களப்பு 261, திருகோணமலை 195) வடக்கு கிழக்கு மாகாணங்களில் 3,049 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் 800 இற்கும் அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, மேலும் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். (thinakaran)
Congratulation all our graduate appointment staff.