பல்வேறு பரீட்சைகளுக்குமான கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பரீட்சைகள் மற்றும் இதர பரீட்சைகள் பலவற்றுக்கான கொடுப்பனவுகள் தாமதமடைந்துள்ள நிலையில் அவை தொடர்பாக வினவப்பட்ட போதே பரீட்சைகள் திணைக்களம் வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
கடந்த க.பொ.த சாதாரண தரத்துக்கான கொடுப்பனவுகள் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழமையாக பெறுபேறு வெளியாகும் காலத்திற்கு சமனாக கொடுப்பனவு பணிகளும் முடிந்திருக்கும். ஆனால் இம்முறை புத்தாண்டு நெருங்கிய பின்னரும் காெடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
மேலும் சில பரீட்சைகளுக்கான கொடுப்பனவு ஒரு வருடத்தையும் கடந்ததும் இன்னமும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஆரம்பத்தில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் வரவு செலவுத் திட்ட அங்கீகாரப் பிரச்சினைகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமடைந்துள்ளன.
வரவு செலவுத் திட்டம் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளது. எனவே, திறைசேரி கொடுப்பனவுகளுக்கான அனுமதியை வழங்கிய உடன் கொடுப்பனவுகளை துரிதமாக மேற்கொள்ள முடியும் எனவும் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.