தீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காவிடின் விளைவுகள் பாரதூரமாக அமையும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
தீவக வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக மாகாணத்திற்கு இணைப்புச் செய்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படவில்லையெனில் விளைவுகள் பாரதூரமாக அமையும். இன்று காரைநகர் கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்குறித்த எச்சரிக்கையை ஊடகவாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர், வடமாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், யாழ்மாவட்டச் செயலாளர் வி.ஜெயரூபன், தீவக வலயச் செயலாளர் எஸ்.தயாபரன் உள்ளிட்ட குழுவினர் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும், பல அதிகாரிகள் மிகுந்த மன உலைச்சலுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில அதிகாரிகளுக்கு மன உலைச்சலோடு, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நடந்துள்ளார். என்பதனை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
பெண் அதிகாரிகளை கட்டிப்பிடி வைத்தியம் செய்யவதற்கு பணிப்பாளர் வற்புறுத்தியுள்ளமையும், விடுமுறையில் நிற்பவர்களை அச்சுறுத்தி கடமைக்கு அழைத்து நீண்ட நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
தீவகக்கல்வி வலயத்தில் நெருக்கடியான காலங்களில் எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி சிரமப்பட்டு கடமையாற்றிய இவ்வதிகாரிகளை வலயக்கல்விப் பணிப்பாளர் இவ்வாறு துன்புறுத்துவது பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் பொறுமையைச் சோதிக்கும் செயற்பாடாகும்.
முன்னைய காலங்களில் புகழ்பூத்த பணிப்பாளர்கள் கடமையாற்றிய தீவகக் கல்வி வலயத்தில் இப்போது நடப்பது ஜீரணிக்கமுடியாத ஒன்றாக உள்ளது.
இன்றும்கூட(04.04.2019) தீவக வலயத்தின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களை அழைத்து முறையற்ற விதத்தில் கையொப்பம் இடுமாறு வற்புறுத்தியபோது அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். வலயக் கல்விப் பணிப்பாளர் அனைவரையும் வெளியே செல்லுமாறு கடுமையான வார்த்தைகளைப் பாவித்து வெளியேற்றியுள்ளார். நிதிப்பிரிவு சார்ந்த அனைவரும் நாளைமுதல் (05.04.2019) சொந்த விடுமுறையில் நின்று ஆளுநரிடம் முறையிடவுள்ளனர்.
இது தவிர இன்று (04.04.2019) தீவக வலயத்தில் உள்ள அதிபர்களை அழைத்து குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் பணிப்பாளர் இறங்கியுள்ளமை, தனக்கு மேலே எவரும் இல்லை என்கின்ற மமதையிலாகும். இதைவிட வலயக் கல்வி அலுவகத்தில் உள்ள நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டத்தை நாளை(05.04.2019) அவசராமாகக்கூட்டியுள்ள பணிப்பாளர் புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்யவும் ஒழுங்கு செய்துள்ளார். ஏற்கனவே நிர்வாகத்தின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் காரைநகர் கோட்டத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதன் நோக்கம், தனக்கான மணிவிழாவை நடாத்துவதற்கும், ஏனையோர் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதற்குமாகும்.
இவை அனைத்தும் நிறுத்தப்பட்டு வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாக தீவக வலயத்தில் இருந்து அப்புறப்படுத்தி நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இணைக்கபட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் கோரிநிற்கின்றனர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.