வடக்கு, கிழக்கில் தமிழில் செயற்படக்கூடிய மின்மானி வாசிப்பாளர்களை நியமிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது வடக்கு ,கிழக்கில் கடமையாற்றும் சிங்கள மின்மானி வாசிப்பாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி அவர்களுக்குப் பதிலாக தமிழில் பணிபுரியக்கூடியவர்கள் ஒரு மாத காலத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் மின்மானி வாசிப்பாளர்கள் சிங்கள மொழியில் பணியாற்றுபவர்களே தற்போது உள்ளனர் என்பதை சபையின் கவனத்திற்குள் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் வடக்குக்குப் பொறுப்பாகவுள்ள மின்சார சபை பணிப்பாளர் குணதிலக்கவுக்குத் தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி., அமைச்சர் வஜிர அபேவர்தன கூட வடக்கிற்கு வெற்றிடங்களை நிரப்பும்போது குறிப்பாக சாரதி, அலுவலக உதவியாளர்களை நியமிக்கும்போது சிங்களவர்கள் அல்லது தமிழ் தெரியாதவர்களையே நியமித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அவரது அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் தமிழ்த் தரப்பு எதிராக வாக்களிக்க நேர்ந்தமை அவரது இத்தகைய செயற்பாடுகளால் தான் என்றும் தெரிவித்தார்