பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள பகிடிவதை காரணமாக 1987 மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்திவிடுகின்றனர் என உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் பகிடிவதை தொடர்பாக கருத்துத் தெரிவித்தார்.
அரசாங்கம் பகிடிவதைக் கெதிரான இறுக்கமான சட்டங்களை பின்பற்றுவதற்கான கொள்கையைக் கொண்டிருப்பினும் பகிடிவதை இன்னமும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.
”நாம் பகிடிவதையை தடுப்பதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் வேந்தர்களுக்கும் மனிதாபிமானமற்ற இந்த பகிடிவதைக் கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
பால் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுக்கான தனியான தொலைபேசி இலக்கமொன்றையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.