பிரபலமான கொழும்பு பாடசாலைகளின் கிளைகளை கொழும்புக்கு வெளியே திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். ஏனெனில் கொழும்பு நகரில் இப்போது காலை வேளையில் உள்ள வாகன நெரிசலை இது பெருமளவு குறைத்து விடும்.
ஏனைய நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரில் அவர்களது நேரத்தை முன்கூட்டி வைத்துள்ளனர். மக்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். அதன் மூலம் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவர்கள் தங்கள் நேரத்தை முன்கூட்டியுள்ளனர். ஆனால் எங்கள் நாட்டில் என்ன நடக்கிறது?
எவ்வளவு நேர காலத்துடன் எங்கள் வீடுகளில் இருந்து நாங்கள் வேலைக்குப் புறப்பட்டாலும் 9 மணிக்கு முன்னர் எங்கள் வேலைத்தலங்களை எட்ட முடிவதில்லை. எங்கள் வீதிகளில் உள்ள வாகன நெரிசலே இதற்குக் காரணம்.
பிரபல பாடசாலைகளின் கிளைகளை கொழும்புக்கு வெளியில் திறந்தால் இந்த காலை நேர வாகன நெரிசல் கொஞ்சம் குறையும் வாய்ப்பு உள்ளது.
‘அருகில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை’ என்ற கருத்தை இப்போது அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்த மேற்படி கொழும்பு பாடசாலைகளின் வெளியில் கிளைகள் என்ற விடயம் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
எத்தகைய பரீட்சையாக இருந்தாலும் அது 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையாக இருக்கட்டும் அல்லது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையாக இருக்கட்டும். அல்லது உயர்தர பரீட்சையாக இருக்கட்டும்… அவற்றின் பெறுபேறுகள் வெளியாகும் போது கொழும்பு பாடசாலைகளில் பயிலும் மாணவ மாணவியர் சிறப்பாக சித்தியடைந்தோர் பட்டியலில் முன்னிலை இடங்களைப் பிடித்திருப்பார்கள்.
கொழும்பு பாடசாலைகளில் அனைத்து வசதிகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைய வசதிகள் இருந்தால் மட்டும் போதாது. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஒத்துழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையும் தேவை. இவையும் அந்த பாடசாலைகளில் கிடைக்கின்றன. இதனால்தான் அந்த பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் பெருமளவு முயற்சிக்கின்றனர்.
இது மட்டுமின்றி, அவ்வாறான பிரபல பாடசாலைகளில் ஆங்கில மொழிப் பிரயோகம் சரளமாக அமைகிறது. வெறும் புத்தகப் படிப்பு மட்டுமன்றி பாடங்களுக்குத் தேவையான மேலதிக தகவல் மற்றும் அறிவினை இன்டர்நெட் மூலமும், நூல் நிலையங்களில் உள்ள சிறப்பு நூல்கள் மூலமும் மாணவ மாணவியர் பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில அறிவு மாணவ மாணவியருக்கு பெரிதும் உதவுகிறது. மேற்படி பாடசாலைகளின் கிளைகள் அதே தரத்துடன் வெளி மாவட்டங்களில் அமையுமானால் குறிப்பிட்ட அந்த மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் மிகுந்த பயனைப் பெறுவர்.
பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனிகளை வழங்கப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அவ்வாறு டெப் கணனிகளை வழங்க பெருமளவு நிதியை செலவிட வேண்டும்.
இதற்காக வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்க நேரிடலாம். எங்கள் கடன் சுமை ஏற்கனவே எம்மை நெருக்கடியில் வைத்துள்ள நிலையில், கடன் பெற்று டெப் கணனிகளை வாங்குவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம். டெப் கணனிகளை இயக்கும் அறிவு மாணவ மாணவியருக்கு இருந்தாலும் கூட அதில் முழுப் பயனையும் பெற ஆங்கில அறிவு தேவை என்பதை மறந்து விடக் கூடாது.
இந்த விடயத்தில் இன்னொன்றும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இதே போன்றுதான் சில காலத்துக்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் மடிக்கணனிகளை கொடுத்தது. ஆனால் சில நாட்களிலேயே இந்த மடிக்கணனிகள் பழுதடைந்து விட்டன. அவற்றைத் திருத்துவதும் எளிதாக இருக்கவில்லை. பலர் அதனை ஒதுக்கி வைத்து விட்டனர். அதேபோன்று மாணவர்களுக்கு வழங்கும் டெப் கணனிகளும் பழுதடைந்து ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
நம்பிக்கையான, தரமான தயாரிப்பாளர்களிடம் இருந்து அரசாங்கம் டெப் கணனிகள் வாங்க வேண்டும். அத்துடன் அவை பழுதடைந்தால் அவற்றை திருத்தும் வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
இங்கிலாந்தில் Raspberry P i என்ற திட்டத்தின் கீழ் கிரெடிட்கார்ட் அளவிலான சிங்கிள் போர்ட் (தனி அட்டை) கணனிகளை உருவாக்கியுள்ளனர். இது 25 டொலர்களுக்கு விற்பனையாகிறது. அண்மையில் உருவாக்கப்பட்டவை 60 டொலர்களுக்கு விற்பனையாகின்றன.
இதனை ஒரு மொனிட்டருடன் அல்லது ரி.வியுடன் இணைத்து பயன்படுத்தலாம். தட்டச்சு செய்ய ஒரு கீபோர்ட் மற்றும் மவுஸ் இருந்தால் இதனை முழுமையான கம்பியூட்டர் போன்றே பயன்படுத்தலாம். இவற்றை இறக்குமதி செய்து இலங்கையில் உள்ள மாணவர்களும் பயன்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கலாம்.
அலோசியஸ் ஹெட்டியாராச்சி
(Daily News) (thinakaran)
(Daily News) (thinakaran)