302 தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகியுள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள 353 தேசிய பாடசாலைகளில் 302 தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2018 ஜ”லை மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
அதன் படி நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று அதன் இறுதி பெயர் பட்டியல் அங்கீகாரத்திற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் அரசாங்க சேவை ஆணைக்குழு அதனை நிராரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு தயாரித்துள்ள இந்த பெயர்பட்டியல் முழுமையானதல்ல என்பதனால் அதனை நிராரித்துள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சில பாடசாலைகளுக்கு அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு போதிய தகைமை காணப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஆணைக்குழு மீண்டும் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத் தேர்வு நடாத்தும்படி கல்வி அமைச்சைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பு ஆனந்த, நாலந்த, காலி ரிட்ச்மன்ட், கண்டி கிங்ஸ்வூட், தர்மராஜ, குருணாகல் மலியதேவ, கொழும்பு ரோயல், கோதமி பாலிகா முதலான பாடசாலைகளுக்கும் பொருத்தமான அடிப்படையில் அதிபர்கள் நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இலங்கை ஆசிரியர் சங்கம் மிக விரைவில் விண்ணப்பங்களைக் கோரி விரைவாக நேர்முகத் தேர்வை நடாத்துமாறு கோரியுள்ளது.
விண்ணப்பம் கோரல், பத்திரிகை விளம்பரம், நேர்முகத் தேர்வு நடாத்துதல் முதலானவற்றுக்கு மிக அதிகமான செலவுகள் ஏற்பட்ட போதிலும் முறையான திட்டமிடல் இன்மை காரணமாக அனைத்தும் வீணாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.