விசாரணை நடத்துமாறு விஜேதாஸ எம்.பி கோரிக்கை
மஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம் , சுரக்ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.இவை தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருப்பதாகவும் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நீதிமற்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மகாபொல நிதியத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக மாலபேயில் 25 ஏக்கரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அதன் முகாமைத்துவத்திற்காக தனியார் நிறுவனமொன்று உருவாக்கப்பட்டு அதற்கு அரச அதிகாரிகள் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
தனியார் பல்கலைக்கழகமாக முன்னேற்றம் கண்ட இந்த நிறுவனத்தின் பெறுமதி 20 0000 மில்லியன் ரூபாவை விட அதிகமாகும்.முகாமைத்துவ நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் அகற்றப்பட்டு குறித்த பல்கலைக்கழகம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.காணி மாத்திரமே அரசுக்கு சொந்தமாக உள்ளது.
உரிய பெறுமதியை விட குறைந்த விலைக்கு மோசடியாக விற்கப்பட்ட இந்த தனியார் பல்கலைக்கழகத்தை மீளப் பெற நான் அமைச்சராக இருந்த போது நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அதற்கு சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
மகாபொல பொறுப்பு நிதியத்தின் கீழுள்ள சொத்துக்களை கைமாற்றுவதற்கு பொறுப்பு நிதிய பணிப்பாளர் சபை எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை.
இந்த மோசடியாக கொடுக்கல் வாங்கலினால் மகாபொல நிதியத்திற்கு 2873 கோடி 20,54,794 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கணக்காளர் நாயகத்தின் 2018 அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுசர் வழங்கும் முறையின் காரணமாக மேலதிகமாக 538.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு செய்யப்பட்டுள்ளது. வவுச்சர் வழங்க 2,685 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் துணி வழங்கியிருந்தால் 2,146.5 மில்லியன் தான் செலவாகியிருக்கும். இந்த கொடுப்பனவினால் 1044 மில்லியன் ரூபா அந்நிய செலவாணி வௌிநாடுகளுக்கு சென்றுள்ளது.வவுச்சரில் அரசியல்வாதிகளின் படத்தை அச்சிட மேலதிகமாக 11 மில்லியன் சென்றுள்ளது.இந்த மோசடி தொடர்பிலும் இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறையிட இருக்கிறேன்.
சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்காக காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு 2700 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதில் 1200 மில்லியன் வெளிநாட்டு காப்புறுதி கம்பனியில் மீள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. 2018 இல் 400 முதல் 450 மில்லியன் ரூபா வரையே காப்புறுதி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதிலும் மோசடி நடந்துள்ளது.
பாடப்புத்தகம் அச்சிடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சரின் புகைப்படத்தை உள்ளடக்குவதற்காக ஒவ்வொரு பாடப்புத்தகத்திற்கும் தலா ஒரு ரூபா செலவிடப்பட்டுள்ளது.இதனால் 29 மில்லியன் ரூபா மோசடி,முறைகோடான பாவனை இடம்பெற்றுள்ளது.
இவை தொர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.