திறமை மிக்க மாணவர்களுக்கு பிரபல்யமான பாடசாலைகளில் கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்குவதற்கு வழிமுறையாக அமைந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய முன்னர் அதற்கான மாற்றீடுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கம், கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி உரையாற்றும் போது, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார். எனினும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் நோக்கத்தை அடையக் கூடிய மாற்றுத் திட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை பிரபல்ய பாடசாலை அனுமதிக்கான வாயிலாகக் காணப்படும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்வதன் மூலம் திறமையான மாணவர்களுக்கு சிறந்த பாடசாலைகளில் கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த வாய்ப்புக்கள் நீங்குகின்றன.
அரசாங்கங்கள் அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வந்த அனைத்துப் பிரதேசங்களிலும் தரமான பாடசாலைகளை நிறுவும் திட்டங்கள் இன்னமும் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போதைய வாயிலை மூட முன்னர் அதற்கான மாற்றீடுகளையும் அதற்கான பொருத்தமான முறைகளையும் திட்டமிட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.