2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினங்கள் அடங்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2019 ஆம் ஆண்டிற்கான உத்தேச மொத்த அரச செலவீனம் 4,470 பில்லியன் ரூபாவாகும்.
இதில் 2 ,232 பில்லியன் ரூபா கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இம்முறையும் ஆகக்கூடுதலான தொகையாக 392 பில்லியன் ரூபாவை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சிற்கு 291 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சிற்கு 216 பில்லியன் ரூபாவும் சுகாதாரம் மற்றும் போசாக்கு அமைச்சிற்கு 186 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சிற்கான உத்தேச ஒதுக்கீடு 104 பில்லியன் ரூபாவாகும் .
இன்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கான வருமான வழிமுறைகள் அடங்கிய வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – வரவு செலவுத்திட்ட உரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
(news.lk)