பாடசாலை மாணவர் ஒருவரைத் தண்டித்த குற்றத்திற்காக 55 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கு மேல் நீதி மன்றம் வழங்கியுள்ள தண்டனைகள் குறித்து தான் கவலை அடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
இது சமூகத்தின் பல தளங்களிலும் வாதப் பிரதி வாதங்களைத் தோற்றுவித்துள்ளது. மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள் பொறுப்புக்கள் குறித்து வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று (2) கல்வி முறையியல் தொடர்பாக எழுதப்பட்ட நூல் ஒன்றின் வௌியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரித்தார்.
”காலையில் பத்திரிகை பார்க்கும் போது கவலைக்குரிய செய்தி ஒன்றைக் கண்டேன். மேல் நீதிமன்றம் ஆசிரியை ஒருவருக்கு கடூளிய சிறைத் தண்டனை விதித்துள்ளது. நான் ஆசிரியர்களால் அதிகம் அடிவாங்கிய ஒருவன். அந்த தீர்ப்பை நான் விமர்சிக்க வில்லை. எனினும் இதனைக் கண்ட ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு படிப்பிப்பார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இதன் பிறகு ஆசிரியர்கள் பிள்ளைகளின் கைகளைக் கூட தொடமாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
2012 செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி குருணாகல் சேர் ஜோன் கொதலாவல மகா வித்தியாலயத்தில் தரம் 11 கற்கும் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைக்கு குற்றவாளியான அந்த பாடசாலையில் ஆசிரியை ரம்ய த சில்வா விற்கு குருணாகல் மேல் நீதி மன்றம் இரண்டு வருடம் கடூளிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடும் என்ற தீர்ப்பை வழங்கியது.
குறித்த தாக்குதல் காரணமாக மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு அவனது கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டதாக நீதி மன்றம் தெரிவித்துள்ளது.