எட்டு வருடங்களாக கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்கு நிரந்த அதிபர் நியமிக்கப்படாமை குறித்து நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தேர்ஸ்டன் கல்லூரியில் மாத்திரமல்ல, நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 353 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றுள்ள 302 தேசிய பாடசாலைகளில் அதிபர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு அதிபர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றும் இன்னமும் நியமனங்கள் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
இந்த 302 பாடசாலைகளிலும் கடமை நிறைவேற்று அதிபர்களே பணிபுரிகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு காரணம் 2012, 2015 ஆகிய வருடங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் நேர்முகப் பரீட்சையோ நியமனமோ வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
தற்போது கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கும் முன்னர் போலவே அரசியல் வாதிகள் பழைய மாணவர்கள் சங்க மாபியாக்கள் அழுத்தங்கள் வழங்கி தமது கடமை நிறைவேற்று அதிபர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதே இந்த பிரச்சினை தீராமைக்கான காரணம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.