(தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு)
இலங்கையில் இயங்கி வருகின்ற சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகள் மீது அரசாங்கத்தின் கவனம் தற்போது திரும்பியிருக்கிறது. சர்வதேச பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள், மாணவர்களின் ஒழுக்கவிழுமியங்கள் தொடர்பாக நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வரும் புகார்களையடுத்தே இவ்விடயத்தை அரசாங்கம் தற்போது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் சர்வதேச பாடசாலைகள் முளைத்திருக்கின்றன. கொழும்பைப் பொறுத்த வரை சில சர்வதேச பாடசாலைகளுக்கிடையே தொழிற் போட்டி நிலவுவதையும் அவதானிக்க முடிகின்றது. இப்பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதனாலேயே இவ்வாறான போட்டாபோட்டியொன்று உருவாகியுள்ளது எனலாம்.
சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக இருவிதமான குற்றச்சாட்டுகள் எமது சமூகத்தில் நிலவி வருகின்றன.
முதலாவது வகை குற்றச்சாட்டு கலாசாரம், பண்பாடு தொடர்பானதாகும். அப்பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற பண்பாடும் கலாசாரமும் எமது நாட்டின் பாரம்பரியத்துக்கு ஒவ்வாத வகையில் மேற்கத்தேய பாணியில் அமைந்திருப்பதாக பலரும் குறை கூறுகின்றனர். அங்கு பயில்கின்ற மாணவர்கள் படிப்படியாக மேற்குலக கலாசாரத்துக்குள் மூழ்கிப் போவதைக் காண முடிகின்றது. இவ்வாறான மேற்கு நாகரிகப் போக்கு அம்மாணவர்களை சீரழிக்கும் விதத்தில் அமைந்து விடுமென்பதே பலரதும் அச்சமாக இருக்கின்றது.
அரசாங்க பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களையும், சர்வதேச பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களையும் நடத்தைக் கோலங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கையில், ஒழுக்கவிழுமியம் சார்ந்த வேறுபாடுகளை தெரிந்து கொள்ள முடிவதாக பலரும் கூறுகின்றனர். சர்வதேச பாடசாலைகள் எமது நாட்டின் கலாசாரங்களை உள்வாங்கியபடிதான் செயற்பட வேண்டுமென்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இரண்டாவது விடயமான கல்விச் செயற்பாடுகளை எடுத்து நோக்குகின்ற போது, சர்வதேச பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் மத்தியில் பாராட்டும்படியான முன்னேற்றங்களைக் காண முடியாதிருக்கின்றது.
உலகின் எந்தவொரு மூலையில் வாழ்கின்ற மாணவனும் தனது நாட்டின் வரலாறு தொடர்பாக ஓரளவேனும் அறிவைக் கொண்டிருப்பது அவசியம். தனது நாட்டின் முன்னோரின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதன் மூலம் அவர்களது அனுபவங்கள் இன்றைய சந்ததியின் எதிர்காலத்துக்கு ஒரு பாடமாக அமைய முடியும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். எனவேதான் எமது நாட்டின் பாடத் திட்டத்தின் க.பொ.த சாதாரண தர வகுப்பில் கட்டாய பாடங்களில் ஒன்றாக வரலாறு பாடமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
தனது தாய்நாட்டின் கடந்த சுமார் இரண்டாயிரம் வருடகால மனித நாகரிகம் எவ்வாறு அமைந்திருந்ததென்ற குறைந்தபட்ச அறிவேனும் மாணவன் ஒருவனுக்கு இல்லாது விடுவதென்பது உண்மையான கல்வியாக அமைய மாட்டாது.
சர்வதேச பாடசாலை மாணவர்களின் பாடத் திட்டத்திலும் வரலாறு பாடம் சேர்க்கப்பட்டிருக்கின்றது. எனினும் இலங்கையின் வரலாறு தொடர்பாக அப்பாடத் திட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மேற்கு நாடுகள் உட்பட முக்கிய சில நாடுகளின் வரலாறுதான் அந்நூலில் உள்ளது.
எமது மாணவர்கள் தமது தாய்நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியாதபடியே பாடங்களைக் கற்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இது போன்றதே அவர்களது தாய்மொழி அறிவும் ஆகும். சர்வதேச பாடசாலை மாணவர்களின் பாடங்களில் அவர்களது தாய்மொழியும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தாய்மொழிப் பாடத்தை அம்மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்குரிய பாடங்களில் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிடையாது. தாய்மொழிப் பாடத்துக்குப் பதிலாக வேறொரு பாடத்துக்குரிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் அங்கே உள்ளன.
சர்வதேச பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை பெருமளவானோரிடத்தில் தாய்மொழிப் பாடமென்பது கசப்பான ஒன்றாகவே உள்ளது. இதற்கான காரணங்களாக பலவற்றைக் கூறலாம்.
சர்வதேச பாடசாலையொன்றுக்குள் மாணவர்கள் பிரவேசிக்கின்ற போது, ஆங்கிலக் கல்வியே அங்கு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது. ஆங்கிலமொழி மூலமாகவே அவர்கள் தங்களுக்குரிய பாடங்களைக் கற்க வேண்டியிருக்கின்றது. வகுப்பில் பலமொழி பேசுகின்ற மாணவர்கள் கற்பதனாலும், பலமொழி பேசுகின்ற ஆசிரியர்கள் கற்பிப்பதனாலும் ஆங்கில மொழியிலேயே அவர்கள் உரையாட வேண்டியிருக்கின்றது. எனவே தாய்மொழியென்பது அங்கே புறந்தள்ளப்பட்டுப் போகின்றது.
இதன் காரணமாக சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வியென்பதற்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தாய்மொழியை சீரான முறையில் படிமுறையாகக் கற்பிக்கும் நடைமுறைகளையும் அங்கே காண முடிவதில்லை. சாதாரண தரப் பரீட்சை நெருங்குகின்ற வேளையிலேயே மாணவர்களும், பெற்றோரும் அப்பாடத்தின் பரீட்சையைப் பற்றிக் கவலைப்படத் தொடங்குகின்றனர்.
இவ்வாறான குறைபாடுகள் நிறைந்ததாகவே சர்வதேச பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலையில் சேர்க்க வேண்டுமென்ற நாட்டம் கொண்டிருந்ததற்கு பிரதான காரணம் ஆங்கில மற்றும் மேற்குலக கலாசார மோகம் எனலாம். இம்மாணவர்களின் பெற்றோரில் பலர் உள்நாட்டுக் கல்வித் திட்டம் மீது தவறான பார்வையைக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டுக் கல்வித் திட்டத்தை தங்களது பிள்ளை தொடருவதென்பது கௌரவமாக இருக்க மாட்டாதென அவர்கள் நம்புகின்றனர்.
சர்வதேச பாடசாலைகளில் தங்களது பிள்ளை கற்பதன் மூலம் மேற்குலக வாழ்க்கை முறைக்கு ஈடான கலாசாரத்துக்கு மாறி விடுமென அவர்கள் கருதுகின்றனர். தாய்மொழியில் வீட்டில் உரையாடுவதை பாமரத்தனமென்று கருதுகின்ற பெற்றோரையும் காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு பாடசாலையில் மட்டுமன்றி வீட்டிலும் கூட தாய்மொழியைப் பேச முடியாத நிலைமையொன்று ஏற்பட்டு விடுகின்றது.
வாழ்வில் மாணவர்கள் உயர்ச்சி பெறுவதற்கு ஆங்கிலக் கல்வி அவசியமென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் தாய்மொழியையும், தாய்நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியாத கல்விமுறையொன்று அவசியம்தானா என்ற வினா இங்கே எழுகின்றது.
நாட்டின் அரசாங்க பாடசாலைகள் கல்வியமைச்சின் கண்காணிப்பின் கீழேயே செயற்படுகின்றன. சர்வதேச பாடசாலைகள் தனியாருக்குரியவையாக இருக்கலாம். ஆனாலும் அங்கு கல்வி கற்பவர்கள் எமது நாட்டின் மாணவர்களாவர். எனவே இம்மாணவர்களின் நலன் கருதி சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகள் மீது அரசு கவனம் செலுத்துவது அவசியமாகும்.