பதினைந்தாம் திகதி கொண்டாடப்படவுள்ள பொங்கல் திருவிழாவிவை முன்னிட்டு பதினான்காம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து அறிவித்திருந்தது.
இதே நேரம், வடக்கு மாகாண, கிழக்கு மாகாண மற்றும் மத்திய மாகாண ஆளுனர்கள் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு கருத்துப்பரிமாறாது தமது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளமை கல்வி அமைச்சை இக்கட்டில் தள்ளிவிட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளம் குற்றம் சாட்டியுள்ளது.
இது, ஆளுனர்கள் மற்றும் கல்வி அமைச்சுக்கிடையிலான குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
அதே நேரம் இந்த விடுமுறை அறிவிப்புக்களில் காணப்பட்ட குளறுபடிகள் பாடசாலைச் சமூகத்தை சங்கடத்திற்குட்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அளுனர்களின் அறிவிப்பில் தமது பிரதேசத்தின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்ட அதேவேளை இன்று பிற்பகல் கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் உட்பட ஊடகங்களில் வௌியாகிய செய்தியில் நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் அதே வேளை ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய தமிழ் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றவாறு அறிவித்தல்களில் குழறுபடிகள் காணப்படுகின்றன.
மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மத்தியில் காணப்படும் மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும். இது மாகாண ஆளுனர்களின் பணிப்புக்கமைவானது. இம்மாகாணங்களில் காணப்படும் தேசிய பாடசாலைகளில் தமிழ் தேசிய பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும். இது கல்வி அமைச்சின் அறிவித்தலுக்கு அவைவானது.
ஆனால் குறித்த மாகாணங்கில் காணப்படும் முஸ்லிம் தேசிய பாடசாலைகள் அனைத்தும் இயங்க வேண்டும்.
அறிவிப்பில் ஏற்பட்ட குழறுபடிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றாரையும் பெரிதும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. குறிப்பாக தூரப் பிரதேசங்களில் இருந்து கடமைக்குச் செல்லும் ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதினைந்தாம் திகதி பொங்கல் கொண்டாட்டங்கள் இடம் பெறுகிறது என்பதனால் பதினாக்காம் திகதி விடுமுறை வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சு இன்று தான் தீர்மானித்தது.
ஏன் பொங்கல் எப்போது என்பதை கல்வி அமைச்சு அறிந்திருக்க வில்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்கின்றனர். குறைந்த பட்சம் பிரதிக் கல்வி அமைச்சர் கூட பொங்கல் தினத்தை அறிந்திருக்க வில்லையா என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.