கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்ற கல்வியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் முன்னுதாரணமான, சிரேஷ்ட செயல் என புத்திஜீவிகள் பாராட்டியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கல்விமான்கள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் காண்பித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தாம் விரும்பாத ஒன்றை நியாயமாக, தர்மமாக நிராகரிக்கும் வேலைத்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக செய்ததை நாங்கள் பார்த்தோம். தயவுசெய்து இந்த செய்தியை, முன்னுதாரணத்தை, நிதர்சனத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
பிரதானமாக மாநாயக்கர்கள் உட்பட அனைத்து சமயங்களின் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த நிதர்சனத்தில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தாம் விரும்பாத ஒன்றை விரும்பவில்லை என்று அறிந்தும், தொண்டைக்கு தெரியாமல் மருந்து குடிப்பதை போல், இரட்டை நிலைப்பாடுகளை கொண்டு செயற்படும் போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் நேரடியாகவும் தெளிவாகவும் தமது விருப்பமின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியும் இந்த செய்தியை புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி அவமதிப்புக்கும் அவதூறுக்கும் உள்ளான பதவியையே அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் கல்வி சமூகமே நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுகிறது. மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் பொது தண்டனையே இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டது.
தமக்கு தேவையான வகையில், தனிப்பட்ட, அரசியல் நெருக்கங்கள் காரணமாக நிறுவனங்களின் பதவிகளுக்கு எவரையும் நியமிக்கக் கூடாது என்பதை ஜனாதிபதி இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் தமது தேவைக்கு அமைய நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்கள், பணிப்பாளர்கள், முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர் என்பது தெளிவு எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Daily Ceylon