எப்போதும் நல்லாசான்களின் பக்கம் நிற்பதுதானே அறம்!
இப்படிச் சொல்வது சிலபோது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். இந்தப் பிரச்சினையை ஆழமாக நோக்க வேண்டியிருக்கிறது.
இந்தச் சமூகம் வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் பணக்காரனையும் அதிகாரம் உள்ளவனையும், கொண்டாடுவதற்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. நமது கூட்டு மன அமைப்பு அதற்கேற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னுள்ள அளவுகோல் காசு பார்ப்பதுதான் – வேறென்ன?
இந்த அமைப்பில் ஆசிரியத்துவம் பரவலான சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு துறையாக இல்லை. இங்கு ஆசிரியனாக/ ஆசிரியையாக இருப்பது அந்தஸ்தில் குறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் ஆசிரியத் தொழில் என்பதே பெண்களுக்குரிய ஒரு துறைதான் (exclusively for women) என்பது போன்ற ஒரு நிலை உருவாகி வருகிறது. வருமானத்தைத் தேடி ஆண்கள் வேறு துறைகளுக்குப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றனர். பேரவலம் இது.
ஆசிரியன் – மாணவன்- பெற்றோர் – கல்வி நிர்வாகிகள்- சமூக அரசியல் சக்திகள் என்ற ஐந்து முனைக்குள் சுழலும் கல்வி வட்டத்தில்- கல்விச் செயற்பாட்டில், ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதே பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது.
இப்படி விரல் நீட்டுவோர் பலர் பெற்றோராக இருக்கின்றனர். ஆனால், தமது பங்கையோ பணியையோ செய்யாமல், ரொம்ப ஈஸியாக ஆசிரியர்கள் மீது பழி போடுகின்றனர். தமது பிள்ளைகளை உத்தமர்களாக மாற்றும் கொந்தராத்தை ஆசிரியர்களின் தலையில் சுமத்தி விட்டு, ஹாயாக சுற்றித் திரியலாம் என்று எண்ணும் பலர் இங்கு இருக்கின்றனர். ஒருவகையான Outsourcing mindset ஆல் வந்த பொறுப்பற்ற தனம் இது.
இன்றுள்ள கல்வித்துறைப் பின்னடைவிற்கு யார் காரணம்? எந்தத் துறையில்தான் இங்கு வீழ்ச்சி இல்லை? ஆசிரியர்களின் பக்கம் பல பிரச்சினைகள் உள்ளன. அதை மறுக்கவில்லை. காசுப்பேய் பிடித்தோர் ரியூஷன் ஆசிரியர்கள் மட்டும்தானா?வைத்தியர்கள் இல்லையா? வக்கீல்கள் இல்லையா? அப்படியானா வியாபாரிகள் இல்லையா? எந்தத் துறையில்தான் இல்லை?
எல்லா ரியூஷன் மாஸ்டர்களும் மோசமில்லை என்பது வேறு கதை. பாடசாலை அமைப்பிலுள்ள கட்டமைப்புக் குறைபாடுகளால், ரியூஷன் கல்வி தவிர்க்க இயலாத விடயமாக மாறி விட்டதை யாரும் மறுக்க முடியாது.
சீர்தூக்கிப் பார்த்தால், இது ஒரு அமைப்பின் – முறைமையின் தோல்வி (System Failure). தனியே ஆசிரியர்களை மட்டும் அதற்குக் காரணமாகக் காட்டுவது தவறு.
இது ஒட்டுமொத்த சமூக அமைப்பின் – பண்பாட்டு உருவாக்கத்தின் – Value System இன் பிரச்சினை. நமது உலகப் பார்வையின் (Worldview இன்) போதாமையால் உருவான பிரச்சினை இது. இதை விரிவாக எழுத முடியாததால், தொட்டுக் காட்டுகிறேன்.
நாம் சிந்திக்க வேண்டிய கோணமே வேறு. கீழைப் பண்பாட்டுத் தளத்தின் அடிவேரான குரு- சிஷ்ய மரபின் தொடர்ச்சியே நாங்கள். காலனித்துவ சக்திகளின் அரசியல் -பொருளாதார நலன்களுக்காக நமது சமூக மூலதனம் (Social Capital) பலியிடப்பட்டது. நமது உன்னதமான சமூக பண்பாட்டுக் கூறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
இன்றைய பிரச்சினைக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது.
ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் மிகவும் பரிதாபத்திற்குரியது. இந்தத் தொழில் உரிய சமூக அங்கீகாரம் பெறாமல் போவதற்கு இதுவும் மிக முக்கியமானதொரு காரணம்.
ஜேர்மனியில் ஆசிரியர்களைப் போல மற்றத் துறையினக்கும் சம்பள அதிகரிப்பு கேட்டபோது, உங்களை- எங்களை உருவாக்கியோரை உங்களோடு எப்படி நான் சமப்படுத்துவேன் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் கேட்டதாக ஒரு செய்தி படித்தேன். சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை சமாளிப்பதற்கான ஒரு அரசியல் உத்தியாக இதை நான் கருதவில்லை. ஆசிரியம் மீது அங்கு பேணப்படும் சமூகப் பெறுமானத்தின் குறிகாட்டியே இது.
இலங்கைச் சமூகம் எப்போது அதன் ஆசிரியர்களை கௌரவமாக நடத்துமோ, பாடசாலை முறைமையை கருத்துடனும் கவனத்துடனும் அணுகுமோ அப்போதுதான் நமக்கு விடிவு வரும்.
ஆசிரியர்கள் ஏன் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்? அதுவும் இந்தக் கொரோனா நெருக்கடிக்குள் உயிரைப் பணயம் வைத்து களமிறங்கியுள்ளது ஏன்? எத்தனை நாள்தான் உள்ளுக்குள்ளேயே குமுறுக் கொண்டிருப்பது?
“எரிமலை எப்படிப் பொறுக்கும்? நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” என்ற கவிஞனின் உணர்வோட்டத்தில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனசவிய ரீச்சிங், கொமாண்டோ ரீச்சிங் என்றெல்லாம் ஆசிரியத் துறையைக் கொச்சைப்படுத்திய கதைகள் பல உண்டு. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்பதற்காக அவர்கள் எல்லோரும் நல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள் என்றில்லை. கற்பித்தல் வாண்மை இல்லாதோருக்கு தொழில் வழங்கும் சரணாலயமாக ஆசிரிய சேவையை மாற்றியமைத்தது யார்?
எந்தத் தொலைநோக்குமற்ற அரசியல்வாதிகளின் கையில் – ஓ.எல் கூட பாஸ் பண்ணாத எம்.பிக்களின் கையில்- இந்த நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து விட்டு, நாம் பார்வையாளர்களாக இருக்கிறோம்.
“ஏணி- தோணி- வாத்தியார்’ என்றிருக்க முடியாது. ஏற மட்டும் ஏணி, ஆற்றைக் கடக்க மட்டும் தோணி, கல்வியில் கரைசேர மட்டும் வாத்தியார் என்று சிந்திப்போர்தான் இங்கு அதிகம்.
ஆசிரியம் மிக மனநிறைவு தரும் ஒரு துறை. ஒரு தொழில்முறை ஆசிரியனாக நான் இல்லாவிட்டாலும் கூட, உத்தியோகப் பற்றற்ற ஆசிரியனாகவே இருக்கிறேன். அது தரும் திருப்தியை அனுபவ ரீதியாக உணர்ந்தவன். உள்ளூர எப்போதும் என்னை ஆசிரியனாகவே உணர்கிறேன்.
நமது ஆசிரிய சேவையில் ஒரு தள மாற்றம்-பெரும் பாய்ச்சல் (Paradigm Shift) தேவை. அதை முறைப்படுத்தி ஒழுங்கமைப்பது அதிகாரத்தில் உள்ளோரின் பொறுப்பும் கடமையுமாகும்.
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை மிகமிக நியாயமானது. இது மிக நீண்டகாலப் பிரச்சினை. தன்னலமற்ற உழைப்பும் மிகுந்த அர்ப்பணிப்பும் கொண்ட பல ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். சதாவும் பாடசாலைக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கும் எத்தனையோ அதிபர்களை நாம் அறிவோம். இவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வேண்டும்.
கடந்த காலங்களில் மருத்துவர்களும் பல்கலைக்கழக ஆசிரியர்களும் சம்பள உயர்வுக் கோரிக்கையோடு வீதிக்கு இறங்கி சாதித்து விட்டார்கள். இப்போது கொழுத்த சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் ஆசிரியர்களும் அதிபர்களும் எவ்வளவு காலமாக இதைச் சொல்லி வந்தாலும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
கொழுத்த சம்பளம் பெறும் White Collar உயர் குழாத்திற்கு ஆசிரிய சமூகத்தின் ஆதங்கம் புரியாது.
ஆதலால்தான் சொல்கிறேன், நான் ஆசிரியர்களின் பக்கம்தான் நிற்கிறேன். எங்களுக்கு எழுத்தறிவித்து, எவ்வளவோ விடயங்களைக் கற்றுத் தந்து வளர்த்து ஆளாக்கிய ஆசான்களை நாம் நெஞ்சில் சுமந்திருக்கிறோம்.
இந்த ஆசிரியர்களுக்கு நீதி வேண்டாமா? அன்றாட வருமானத்திற்காக அலையும் பொருளாதாரப் பிராணிகளாக அவர்களை மாற்றி விட்டால், கல்வியில் மலர்ச்சி எப்படி சாத்தியப்படும்?
எல்லா ஆசிரியர்களும் நல்லவர்களா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எதில்தான் குறை இல்லை? குறையுள்ளோரைக் காட்டி நிறைவானோரைத் தண்டிக்க முடியாதில்லையா? இது முறைமை சார்ந்த சிக்கல். இதைத் தாண்டித்தான் தீர்வைக் கண்டடைய வேண்டும்.
இந்த சம்பள முரண்பாட்டைத் தீர்த்து வைத்து, ஆசிரிய சேவையை மறுசீரமைப்பதே, இலங்கையின் எதிர்காலத்தை ஆரோக்கியமாக வடிவமைப்பதற்கான சரியான எத்தனமாக இருக்கும்.
எப்போதும் ஆசிரியர்களுக்காக குரல்கொடுத்து வரும் Anbu Javaharsha சேர் சுட்டிக் காட்டும், அரசின் திருப்தி தராத சம்பளத் திட்ட முன்மமொழிவை இங்கு இணைத்திருக்கிறேன். இதை எப்படி ஆசிரியர் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளும் என்ற அவரது கேள்வி நியாயமானதுதானே?
வீதியில் இறங்கியிருக்கும் எல்லா அதிபர்களினதும் ஆசிரியர்களினதும், கேள்விகளையும் மனக்குமுறல்களையும், வெளியில் யார் மறுத்தாலும், நமது மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளும்தானே?