பாடசாலைகளை முடிந்தவரை விரைவில் திறக்க வேண்டும் – கல்வி அமைச்சர்
பாடசாலைகளை முடிந்த வரையில் விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குறிப்பாக வசதி குறைந்த மாணவர்கள் கல்வியை இழந்திருப்பது துரதிஸ்டமானது என கல்வி அமைச்சு நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணைய வசதி இன்றிய பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்து மாணவர்களும் பொதுப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். அதற்கு தயாராவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதார கட்டுப்பாடுகளைக் கடைப்படித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதே இலக்காகும்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 83 வீதமானோர் தப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் என்றவகையில் நான் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களிடம் கோருவது என்னவென்றால், பாடசாலைகளுக்குச் செல்லுங்கள். விரையில் பாடசாலைகளைத் திறக்கும் வகையில் தயார்படுத்துங்கள் என்பதாகும் என கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
ஓகஸ்ட் இல் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், பாடசாலைகளைத் திறப்பது சாத்தியமாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டிலுள்ள 10165 பாடசாலைகளில் 2962 பாடசாலைகளில் 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டால் இந்த பாடசாலைகளைத் திறக்க முடியும். இதற்கான அனுமதியை சுகாதார அதிகாரிகள் தருவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் கட்டங்கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.