கொரோனா பரவல் சூழ்நிலையில் அதனோடு வாழப் பழகிக்கொண்டாலும், அதனால் உருவான ஏனைய பிரச்சினைகளை சமாளிப்பது என்பது பெரும் சவாலாக இன்று மாறியுள்ளது. தொற்று பரவலை தடுப்பதற்கு தனிமைப்படுத்தல், பயணத் தடை, கல்வி நிறுவனங்கள் மூடப்படல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் சிறுவர்கள், வளர்ந்தவர்கள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டில் இருப்பதால் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன.
பெற்றோர்களை பொறுத்த வரை பிள்ளைகளை சமாளிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. பாடசாலைக் காலங்களில் பாடசாலைகளில் அதிக நேரத்தை பிள்ளைகள் செலவிடுவர். பின்னர் மார்க்க வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள், விளையாட்டு மைதானம் என வெளியில் செல்வதால் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவாக இருந்தது.
ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள் வீட்டில் இருப்பதால் பெற்றோர் பாதுகாவலர்கள் அதிக வேலைச் சுமைக்கு முகம் கொடுக்கின்றனர். அதிக நேரம் இருப்பதால் எந்த நேரமும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் இவர்களின் உடல் எடை அசாதாரணமாக அதிகரிக்கிறது. இதனால் இவர்கள் பல்வேறு தொற்றா நோய்களுக்கும் ஆளாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலை சென்று கல்வி கற்றால்தான் படிப்பு என்ற மனோநிலையில் பிள்ளைகள் காணப்படுகின்றனர். படிக்கும்படி நச்சரிப்பதால் பிள்ளைகள் அதிக உளநெருக்கீட்டிற்கு ஆளாகி உள்ளனர். இதனால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளதோடு அவை குடும்ப முரண்பாடுகளாகவும் மாறி உள்ளன.
இதை விட மாணவர்களுக்கு இணையவழி மூலமான கற்பித்தல் மற்றும் வட்ஸ்அப் மூலம் செயலட்டைப் பயிற்சிகள் என ஆசிரியர்களால் கொடுக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் பாடசாலை பாடவேளையான 45 நிமிடங்களுக்குள் சொற்ப விடயங்களை கற்றுக் கொடுத்து விட்டு வீட்டில் மீதியை செய்யுமாறு வீட்டுப் பாடம் கொடுக்கின்றனர்.
வட்ஸ்அப் மூலம் ஒன்றன்பின் ஒன்றாக செயலட்டைகளை அனுப்பி விட்டு இறுதியில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தவும் என குறிப்பு எழுதி விடுகின்றனர். இந்த ஒரு வசனம் மாணவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
இது மாத்திரமன்றி ZOOM மூலமான கற்பித்தல் என்று ரியூசன் ஆசிரியர்கள் அதிக பணத்தை கட்டணமாய் கோருகின்றனர். இது ஏழைப் பெற்றாருக்கும் மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேளை உணவிற்கே என்ன செய்வது என்று திண்டாடும் இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுதல் என்பது நினைத்து பார்க்க முடியா சுமையாக மாறியுள்ளது.
வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது என பொழுதை போக்குகின்றனர். இதனால் பெற்றோருக்கு தொல்லை குறைந்தாலும் மாணாக்கரின் சிந்தனை சக்தி, கற்பனைத் திறன் மழுங்கடிக்கப்படுவதோடு கண்பார்வை மங்குதல், தலைவலி, முள்ளந்தண்டு நோவு போன்ற உடல் பாதிப்புக்களும் ஏற்படுகின்றன.
இவை தவிர, அண்மையில் வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மூலம் மாணவர்களும் பெற்றோரும். கற்பித்த ஆசிரியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பெற்றோரின் திணிப்பால் விருப்பமில்லாமல் கற்றதால் மாணவர்கள் பலர் குறைந்த பரீட்சை பெறுபேற்றால் மனம் உடைந்த நிலையில் உள்ளனர். தமது பணம், நேரம் என்பவற்றை வாரி இறைத்தது மட்டுமல்லாது தமது கௌரவம் பறி போன நிலையில் மனஉளைச்சலுக்குப் பெற்றோர் ஆளாகி உள்ளனர்.
கொரோனா கால கொடுமைகளில் முக்கியமானது குடும்பங்களின் வருமானப் பிரச்சினையாகும். நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள், விவசாயிகள் வருமானம் இல்லாமல் குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று சமூகத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இதனால் நாளுக்கு நாள் குடும்ப வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பற்ற வகையில் முகக்கவசங்கள், கையுறைகள் என்பன கண்டபடி வீசப்பட்டுக் கிடக்கின்றன. இளநீர் அருந்திய கோம்பைகள் கூட அகற்றப்படாமல் அங்குமிங்கும் கிடப்பதால் டெங்கு நோய் பரவக் கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது.
எனவே ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கொரோனா பரவல் அதிகரிப்பினால் உயிராபத்து ஏற்படுவதோடு சமூக மட்டத்தில் அதன் தாக்கங்களும் அதிகரித்துத்தான் உள்ளன என்பது வெளிப்படையான உண்மையாகும்.
Very awesome.