கல்விப்புல ஆளுமைகள் அறிமுகம்: பேராசிரியர் கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
எம்.எம்.அஹமத் பிஸ்தாமி
இலங்கையின் நீண்ட கல்வி வரலாற்றில், சமகாலத்தில் மின்னும் சில உயிர்த்துடிப்பான ஆளுமைகளை அறிமுகம் செய்வதே இத்தொடரின் நோக்கம். அந்த வகையில் தற்பொழுது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விப்பீடத்தில் பேராசிரியராக சேவையாற்றும் கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன் குறித்தான அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளோம்.
ஒரு மனிதன் உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளான் என்பதை வைத்து அவனது வாழ்நாள் சாதனைகள் அளவிடப்படுவதில்லை. வாழ்ந்த காலத்தில் எத்தகைய சாதனையை இந்த உலகத்தில் நிலைநாட்டி செல்கின்றார் என்பதை வைத்தே ஒருவரது ஆயுளும் ஆளுமையும் அளவிடப்படும். அந்த வகையில் தனது வாழ் நாளில் குறிப்பிடத்தக்க கல்விசார் சாதனைகளையும் நிலைநாட்டி தனது துறையில் தனக்குப் பின் அதனை வளர்க்கும் வகையில் தேவையான வழிகாட்டல்களையும் வழங்கி தலைசிறந்த மாணவ பரம்பரை ஒன்றையும் உருவாக்கியுள்ள கலாநிதி எப்.எம் நவாஸ்தீன் அவர்களை நாம் பாராட்டியேதான் ஆக வேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி நவாஸ்தீன் கல்வித்துறைசார் ஆளணிக்கு நன்கு அறிமுகமானவர்.
குடும்பப் பின்னணி
பரீத் முஹம்மத் நவாஸ்தீன் 1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில், மர்கூம். பரீத் முகம்மத் மற்றும் ஆமீனா உம்மா ஆகியோருக்கு பிறந்தார். தந்தை கேரளாவில் மலப்புரம் எனும் ஊரில் இருந்து சிறு வயதில் இலங்கைக்கு வந்து குடிபெயர்ந்தவர் ஆவார். தாயின் பிறப்பிடம் முல்லைத்தீவு, தண்ணீரூற்று ஆகும். தந்தை யாழ்ப்பாணத்தில் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அதேவேளை யாழ்ப்பாணம் ஐதுரூஸ் மகாம் பள்ளிவாசலில் முஅத்தினாக நீண்ட காலமாக சேவையாற்றியவராவார். எப்.எம்.நவாஸ்தீன் அவர்களுக்கு சகோதர சகோதரிகள் எட்டு பேர் உள்ளனர். மூத்த சகோதரர் மர்ஹூம் முஹிதீன் மௌலவி யாழ் முஸ்லிம்களில் இருந்து முதன் முதலாக மகரகமை கபூரியா அரபு கல்லூரியில் பயின்றவர்களில் ஒருவராவார். சகோதரிகளுள் மூத்தவர் யாழ் கதீஜா மகளில் கல்லூரியில் இருந்து முதன்முதலாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்றவர்களில் ஒருவர் ஆவார்.
பாடசாலை கல்வி
நவாஸ்தீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கதீஜா ஆரம்ப பாடசாலை மற்றும் யாழ் மன்பஉல் உலும் அரசினர் பாடசாலைகளில் பெற்றார். ஆரம்ப பாடசாலைக் கல்வியுடன் இணைந்த வகையில் மாலை நேரங்களில், மானிப்பாய் வீதியில் இயங்கி வந்த மர்ஹூம் ஹனிபா மௌலவியினால் நடத்தப்பட்டு வந்த குர்ஆன் மத்ரசாவிலும் கற்றுள்ளார். ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து, தனது இடைநிலை மற்றும் உயர் கல்வியினை யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் கற்றுள்ளார். மர்ஹூம் ஹாமீம் அதிபரின் பாசறையில் தரம் வாய்ந்த ஆசிரியர்களிடம் கல்வி பெற்ற இவர், கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்களில் ஒருவராவார். தான் கல்வி பயின்ற ஆசிரியர்களில் திரு. புஆத், திரு. எ.சி.நஜிமுதீன், திரு. தங்கராசா, மர்ஹூம். ஜமீல், மர்கூம் மன்சூர், மர்ஹூம், மௌலவி ஒ.எம்.அப்துல் ரஸ்ஸாக், எம்.எஸ்.எம். கியாரத் மற்றும் காலஞ்சென்ற மரியதாஸ் ஆகிய ஆசிரியர்களை தனது இடைநிலைக் கல்வியில் அதிகம் செல்வாக்கு செலுத்தியவர்களாக குறிப்பிட்டுக் கூறுகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் ஆரம்பத்தில் வணிகத்துறையில் கல்வி பயின்ற போதிலும், அதிபரின் வேண்டுகோளை ஏற்று கலைப்பிரிவில் உயர்தர கல்வியினை ஒஸ்மானியாவில் தொடர்ந்திருந்தார். கலைத்துறை பாடங்களாக புவியியல், வர்த்தகம், பொருளியல், இஸ்லாமிய நாகரீகம் ஆகிய பாடங்களையே கற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. உயர்கல்வியில், திரு. தங்கராசா ஆசிரியர், திரு.மகேந்திரன் ஆசிரியர், திரு. கலாமணி ஆசிரியர் மௌலவி ஒ.எம்.அப்துல் ரஸ்ஸாக் , காலஞ்சென்ற கலாநிதி க.குணராசா, திரு. குமாரவேல் ஆசிரியர்கள் தனது க.பொ.த. உயர்தர கல்வியில் அதிகம் செல்வாக்கு செலுத்தியவர்களாக குறிப்பிட்டுக் கூறுகிறார்.
இடைநிலைக் கல்வியினை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே தொடர வேண்டியிருந்தது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக அடிக்கடி பாடசாலைக் கல்வி தடைப்பட்டது எனலாம். இதன் காரணமாக, 1987 இல் இடம் பெறவிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையை உரிய காலத்தில் நடைபெறாமல் 1988 யிலேயே நடைபெற்று இருந்தது. மேலும், தனது கல்வித் தேவைகளுக்காக பாடசாலை விட்டதும் யாழ்ப்பாண தையல் கடையில் வேலை பார்த்து வந்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும். க.பொ.த உயர்தர கல்வியும், 1990 அக்டோபர் மாதம் வடபுலத்தில் இருந்து முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் காரணமாக தடைப்பட்டது. எனினும் க.பொ.த உயர்தர விசேட பரீட்சை 1991 இடம்பெற்ற போது, அதில் தோற்றி புவியியல், வர்த்தகம், பொருளியல், மற்றும் இஸ்லாமிய நாகரிகம் ஆகிய பாடங்களில் சிறப்பான சித்திகளைப் பெற்றுக் கொண்டார். 1990 அக்டோபர் மாதம் வடபுலத்தில் இருந்து முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் காரணமாக, மினுவாங்கொடை கல்லொலுவ எனும் கிராமத்தில் பெற்றோருடன் சில காலம் அகதியாக தஞ்சம் புகுந்திருந்தார். இக்காலப் பகுதியில் அப்பிரதேச மக்கள், உயர்தரக் கற்கைக்குத் தேவையான பாடக் குறிப்புகளை பெற்றுத் தந்ததாகவும், அப்பாடக் குறிப்புகளை கற்றே 1991 இடம்பெற்ற பரீட்சைக்குத் தோற்றியதாகவும் கூறுகிறார்.
யாழ். ஒஸ்மானியா பாடசாலை ஆசிரியர்கள்
பல்கலைக்கழக கல்வி
க.பொ.த உயர்தர பெறுபேறுகளின்படி பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகத்த்தில் கலைப்பிரிவில் முதல் வருடத்தில் புவியியல், பொருளியல், வர்த்தகம் ஆகிய பாடங்களை தனது தேர்வு பாடங்களாக கற்றார். பொது கலைத் தேர்வு பரீட்சையில் (GAQ) அனைத்து பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்றதுடன் அவ்வருட பரீட்சையில் குறிப்பாக புவியியல் பாடத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று மூன்று பரிசில்களை பெற்றுக்கொண்டார். புவியியல் பாடத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றமைக்காக என்ரைட் ஞாபகார்த்த பரிசு, பேராதெனிய ஆர்ட்ஸ் நிதி, கினிகே கூக் ஞாபகார்த்த பரிசு என்பவனவே அவைகளாகும். பொது கலைத் தேர்வு பரீட்சையின்படி அனைத்து பாடங்களிலும் சிறப்புக் கற்கையினை மேற்கொள்ளத் தகுதி பெற்றிருந்தும், தனக்கு மிகவும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட புவியியல் பாடத்தையே சிறப்புத் துறையாக விரும்பி கற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக இறுதி வருட பரீட்சையிலும் புவியியல் துறையில் அதிக புள்ளிகள் பெற்றமைக்காக செங்கடகல லயன்ஸ் கிளப் ஸ்ரீ பத்திரன நினைவுப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார்.
இணைப்பபாட விதான செயற்பாட்டு அடைவுகள்
சிறு வயதில் இருந்தே இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். யாழ் சன்மார்க்க இயக்கம், மீலாத் தினத்தை முன்னிட்டு நடாத்திய அரபு எழுத்தணி, குர்ஆன் மனனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களை பெற்றுள்ளார். மேலும், பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியதாகவும், பெரும்பாலும், விளையாட்டுப் போட்டிகளில் நான்காம், ஐந்தாம் இடங்களையே பெற முடிந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஒஸ்மானியா கல்லூரியின் வெள்ளி விழா பரிசளிப்பு நிகழ்வில் பல பாட அடைவுகளுக்காக சான்றிதழ்களை பெற்றுள்ளார். பாடசாலை காலப்பகுதியில் 1988/1990 ஆகிய காலப் பகுதியில் மாணவர் தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டுள்ளார். இவரது பல்கலைகழக வாழ்வில், முஸ்லிம் மஜ்லிஸில் உதவி தலைவர் (1996), உதவி செயலாளார் (1994/1995), புவியியல் சங்கத்தில் உதவி செயலாளார் (1994) ஆகிய பதவிகளில் கடமையாற்றியும் உள்ளார். தற்போதும் கல்வி முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கத்தில் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக செயற்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் மாணவர் தலைவர்கள் 1988
தொழில் பதவி நிலைகள்
புவியியலில் இளங்கலைமானி பட்டத்தினை நிறைவு செய்த பின்னர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் புவியியல் உதவி விரிவுரையாளாரக சில காலம் கடமையாற்றி உள்ளார். அங்கு, தொடர்ந்தும் உதவி விரிவுரையாளராக கடமையாற்ற எதிர்பார்த்திருந்த போதிலும், விண்ணப்ப படிவம் காணாமலாக்கப்பட்ட நிகழ்வின் காரணமாக அங்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாமல் போனது. பின்னர், பேருவளை ஜாமியா நளிமியாவில் புவியியல் விரிவுரையாளராக தன்னை இணைத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகத்தில் சமூகவியல் விஞ்ஞான துறையில் செயற்றிட்ட அதிகாரியாக உள்வாங்கப்பட்டு இருந்தார். அதன் பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடம் நிரந்த விரிவுரையாளராக 2006 இல் இவரை உள்வாங்கிக் கொண்டது. இவரது நீண்ட கால உழைப்பின் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் தொடக்கம் இவர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின், முதலாவது பேராசிரியர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உயர் கல்வியில் ஈடுபாடு
பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய போது புவியியலில் முது தத்துவமாணி கற்கை நெறியினை தொடர்ந்திருந்தார். எனினும், தேசிய கல்வி நிறுவகத்தில் இணைந்த பின்னர், உலக வங்கியின் பொதுக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலைத்திட்டமும் போதனையும் எனும் துறையில் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில், முது விஞ்ஞானமானியை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், புவியியலில் முதுதத்துவமாணி கற்கை நெறியினை இடையில் கைவிட வேண்டியிருந்தது. பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்த பின்னர், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலைத்திட்டமும் போதனாமுறையும் எனும் துறையில் கலாநிதி பட்டத்துக்காக இணைந்து 2014 ஆம் ஆண்டு வெற்றிகரமாக அதனை நிறைவு செய்தார். இக்கற்கையினை, உரிய காலத்தில் நிறைவு செய்தமைக்காக Graduate On Time எனும் விசேட விருதினையும் பெற்றுக்கொண்டார். மேலும், தாய்லாந்து கேசட்சார்ட் பல்கலைக்கழகத்தில் முரண்பாடு தீர்த்தல் முகாகமைத்துவம், இந்தியாவில் புள்ளியல் பகுப்பாய்வு மென்பொருட்களில் சான்றிதழ் கற்கைநெறி, நிகழ்நிலை போதனாசிரியர் அறிவுரைப்பாளர் போன்ற பல்வேறு குறுங்கால கற்கைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
கலாநிதி பட்டமளிப்பு விழாவில் ஆய்வு மேற்பார்வையாளர்களான பேராசிரியர் சுபுஹான் தம்பி மீரா மற்றும் கலாநிதி ஷரிபா நூர் ஆகியோருடன்
கல்விசார் கட்டுரைகளும் பிரசுரங்களும்
ஒஸ்மானிய கல்லூரியின் வெள்ளி விழா மலரான அல்-ஹிக்மாவில் இவரது முதல் கட்டுரை வெளியாகியது. தொடர்ந்து, அகதி சஞ்சிகை, பல்கலைக்கழக சஞ்சிகைகளான அல்-இன்ஷிராஹ், கீதம் சஞ்சிகைகள், கல்வி அமைச்சின் சஞ்சிகையான, கூர்மதி ஆகியவற்றிலும் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன. மேலும், அகவிழி, ஆசிரியம், கடல், பார்வை, கல்வியாலாளன் போன்ற சஞ்சிகைகளிலும் இவரது பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கல்வி நிறுவகத்தில் கடமையாற்றிய போது சமூகக்கல்வி, வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள் சார்ந்து பல ஆசிரியர் கைநூல்கள், பாட வாசிப்பு நூல்களும் இவரது பதிப்பில் வெளிவந்துள்ளன. கல்வி அமைச்சு, யுனெஸ்கோ ஆகிய நிறுவனங்களின் சில நூல்கள் இவரது தமிழாக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவை தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வு சஞ்சிகைகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வுக் கட்டுரைகளை தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் எழுதியமைக்காக 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இலங்கை திறந்த பல்கலைக்கழக ஆய்வு விருதினையும் தொடர்ச்சியாக பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது ஆய்வுக் கட்டுரைகள்பற்றிய கூகுள் புலமையாளர் பகுதி – இங்கே க்லிக் செய்க
வெளியிட்ட நூல்கள்
மட்டுமன்றி, கல்வியியல் துறையில் கலைத்திட்ட அடிப்படைகள், உசாத்துணைப் பாணிகள் மாணவர்களுக்கான சுய-ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் போன்ற நூல்களை ஏனைய எழுத்தாளர்களுடன் இணைந்து வெளியிட்டும் உள்ளார். மேலும், மாணவர்களுக்கு மிகப் பயன் தரும் சிறந்த பல கட்டுரைகளை தந்து கற்றது கடுகளவு வலைப்பதிவில் https://nawasdeen.blogspot.com/ தொடர்ந்து வெளியிட்டு உயர் கற்கை மாணவர்களின் அமோக வரவேற்பினையும் பெற்று வருகின்றார்.
கல்வி முதுமாணி நிகழ்ச்சித்திட்ட யாழ் பிராந்திய நிலைய மாணவர்கள் அளித்த கெளரவம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளராக இயங்கி வரும், இவர் கற்பித்தலில் தனக்கே உரிய பாணியின் கற்பிப்பதும், எந்த வித பாகுபாடுமின்றி மாணவர்களை வழிப்படுத்தியும் வருகிறர். கல்விப்புலத்தில் மிகப்பெரும் பலமாக துடிப்புடன் தன்னையும் இற்றைப்படுத்தி இயங்கி தனது மாணவர்களையும் ஊக்குவித்து வழிகாட்டி இயங்க வைக்கும் கலாநிதி எப்.எம் நவாஸ்தீன் அவர்களது பணிகள் சிறக்கட்டும்.இறைவன் நீண்ட நெடிய ஆயுளை அவருக்கு வழங்க வேண்டும் என வாழ்த்தவும் பிரார்த்திக்கவும் செய்கிறோம்.