பிள்ளைமையக் கல்வியில் ஆரம்பக்கல்வி ஆசிரியரின் வகிபாகம்.
பிள்ளைப்பருவம் ஒரு உணர்திறனுள்ள கட்டமாகும். இந்தக் கட்டத்தில் ஒரு பிள்ளை உடல், உள, ஒழுக்க ரீதியாக விருத்தியடைகிறது.மொழியும் ஆக்கத் திறனும் கூட இந்தக் காலகட்டத்தில் விருத்தியடைகிறது ஆனால் அங்கே பிள்ளைகளுக்கிடையிலான வேறுபாடுகள் உள்ளன. ஆகையினால் ஆசிரியர் இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியதுடன் நவீன விஞ்ஞானபூர்வ அறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு அன்பான உற்சாகமான நபராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையும் சில செயல் வல்லமைகளுடன் பிறந்திருப்பதையும் வீட்டில் பிறப்பு தொடக்கம் 3 அல்லது 4 வயது வரை பெற்றிருக்கும் அனுபவங்களுடன் பாடசாலைக்கு வருவதையும் ஆசிரியர் மறக்கக் கூடாது. ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பெறுமதியான சொத்தென்றும் பிள்ளை கற்றல் அனுபவங்களைப் பெறத்தேவையான சூழலை பிள்ளை மையக் கல்வியூடாக வழங்க முடியும் என்றும் நம்ப வேண்டும். ஒரு ஆசிரியர் பிள்ளையை அடையாளங்காண்டதுடன் யாருடன் வேலை செய்கின்றார் எனப் புரிந்து கொள்வதும், எவ்வாறு வேலை செய்வது மற்றும் பிள்ளைக்கு என்ன தேவை என அடையாளம் காணக்கூடியவராக இருக்க வேண்டும். பெற்றோரின் கைகளில் இருந்து நேரடியாக ஆசிரியரின் கைகளுக்கு வரும் பிள்ளைக்கு இடம் சார் பெற்றோர் ஆசிரியர் ஆவார் எனப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால், பிள்ளையை ஆச்சரியமானதும் மகிழ்ச்சியான அனுபவங்களைக் கொண்ட அற்புதமான ஒரு உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அவர்களது வகிபாகம் அன்பினாலும் இரக்கத்தினாலும் நிறைந்திருக்க வேண்டும்.
உணர்திறனுள்ள இரக்கமான ஒரு ஆசிரியர் பிள்ளைகளின் உளத்திருப்திக்கு பங்களிப்புக் செய்து அவர்கள் திருப்திகரமான கற்றல் அனுபவங்களைப் பெற அவர்களுக்கு உதவுவார். அவர் உன்னதமான சுய பண்புகளை வெளிக்காட்ட வேண்டியதுடன் பிள்ளைகளது தேவைகளையும் பிள்ளை மையக் கல்வியின் குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்ட கற்றற் சூழலை வழங்க வேண்டும் . ஆசிரியர் பிள்ளைக்கு ஒரு நண்பனாக இருக்க வேண்டும். அத்துடன் பரிவானவராகவும் பிள்ளையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் விழுமியங்களும் தத்துவங்களும் பிள்ளைக்குக் கடத்தப்படுவதால் அவர்களது மொழி, சமயம், இனம் நோக்கிய முற்சாய்வைக் கொண்டிராமல் சரியான மனப்பாங்குகளை உடையவர்களாயிருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நன்கு சரி செய்யப்பட்டவர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.அவர்களது வகிபாகம் பிள்ளை யார் அவர்களுக்கு என்ன தேவை பிள்ளைகளுடன் வேலை செய்வதற்கு அவளுக்குத் தேவையான பலம், பிள்ளைகள் எதிர்நோக்கக் கூடிய சவால்கள் அத்துடன் பிள்ளைகளுடன் வாழ்வதற்கு அவளுக்குத் தேவையான சூழலின் வகை என்பவற்றில் கவனமாயிருத்தலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
பிள்ளை வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தைப் பற்றிய விழிப்புணர்விற்கு உதவி செய்யும் ஒரு கற்றற் சூழலை வழங்குவதில் ஆசிரியர் மிகவும் ஆர்வம் மிகுந்தவராக இருக்க வேண்டும் . இந்த காலப்பகுதியில் சகல சமூகத் தொடர்புகளும் உருவாக்கப்பட்டு கொண்டிருப்பதால் பிள்ளைக்கு அன்பு பாசமும் மட்டுமன்றி பயம் அல்லது கோபத்தை விருத்தி செய்வதற்கு இடம் கொடாத சூழலும் தேவைப்படுகிறது. ஆசிரியர்களுடனும் சகபாடிகளுடனும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் காலத்தைக் கழிக்க உதவி புரியவும் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கு பிள்ளைக்கு அவசியமான பின்புலத்தை ஆசிரியர் வழங்கவும் வேண்டும். அந்த வகையில் ஆசிரியரது வகிபாகமானது பிள்ளைகளின் உள் ஆத்மாவைத் தூண்டும் திறன்களைக் கொண்டிருக்கிறது.
பெருவாரியான முன்பள்ளி அல்லது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பிள்ளை எவ்வாறு சிந்திக்கின்றது என அறிய முடிவதில்லை. ஆனால் ஒரு நேர்முக மன நிலைப்பாங்குடைய ஒரு ஆசிரியரின் வகிபாகமானது பிள்ளைகள் ஒரு வளர்ந்தோரல்ல என்றும் அவர்கள் குறைந்தளவான அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் உணர வேண்டியதாகும். ஆசிரியர்கள் ஒவ்வொரு பிள்ளையையும் குறிப்பாக அடையாளம் காண்பதற்குத் தேவையான திறன்களை விருத்தி செய்யவும் அவர்களது திறன்களை விருத்தி செய்வதற்கும் ஒரு உளவியலாளராக நடிக்கவும் வேண்டும். ஆசிரியரின் வகிபாகத்திலுள்ள மூலதத்துவம் யாதெனில் அடிக்கடி கற்பித்தல் கற்றல் செயன்முறையை ஆராய்தலாகும் அந்த வகையில், அவர்கள் நேர்மையான ஒரு தெளிவான மதிப்பீட்டையும் மற்றவர்களுக்கு மரியாதையும் கொண்ட ஒரு நபராக இருக்க வேண்டும்.
பிள்ளைகளை வழிநடத்தும் ஒருவர் சமநிலை ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டுமாதலால் இந்த வாண்மையைத் தெரிவு செய்யும் ஒரு நபருக்கு மிக முக்கியமான விடயம் அவசியமான தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளுதலாகும். ஒரு ஆசிரியர் பிள்ளைகளில் தனியாள் வேறுபாடுகளை அடையாளம் கண்டாலும் பிள்ளைகளது திறன்களையும் ஆற்றல்களையும் விருத்தி செய்வதற்கு அவர்களது தனிப்பட்ட திறன்களையும் ஆற்றல்களையும் விருத்தி செய்ய வேண்டும்.அவர்கள் பிள்ளைப்பருவம், மற்றும் ஆரம்பக் கல்விக்கலைத் திட்டம், அதே போன்று இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுடன் தொடர்பான பாடல், சங்கீத உபகரணங்களைவாசித்தல், நாடகம்நடித்தல், ஆடுதல். வரைதலும் வரணந்தீட்டலும் ஆகியவற்றில் தேர்ச்சியுடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் விளையாட்டு கலைத் திட்டத்தில் ஒரு அத்தியாவசியமானதொரு பாகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பிள்ளையின் தன்மைக்கேற்ப ஒரு சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியரால் உருவாக்கப்படும் சூழல் பிள்ளையின் உடன் பிறந்த ஆற்றல்களைக் கண்டு பிடிப்பதற்குத் துணைபுரிய வேண்டும் . அவ்வாறான ஒரு சூழலை வழங்குவதற்கு கற்பித்தல் கற்றல் உபகரணங்களைத் தயாரித்தல் அவசியமாகும். கற்பித்தல் கற்றல் மையம் பிள்ளைகளுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் . இந்தச் சூழலில், பிள்ளைகள் சுதந்திரமாக அவற்றைப் பயன்படுத்தி குழுச் செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தக்கூடியவாறான இடங்களில் கற்பித்தல் கற்றல் உபகரணங்கள் வைக்கப்பட வேண்டும். பலதரப்பட்ட அனுபவங்களைத் தருவதற்கு கற்பித்தல் உபகரணம் காலத்திற்குக் காலம் மாற்றப்பட வேண்டும். அந்த வகையான ஒரு சூழலில் ஆசிரியரின் வகிபாகமானது கற்பித்தல் கற்றல் செயன்முறைக்கு பிள்ளை மையக் கல்வியைப் பயன்படுத்துதலாகும்.
இந்தச் சூழலில் அநாவசியமான கட்டளைகளோ மிரட்டல்களோ இடம் பெறக்கூடாது. பிள்ளை இயலாதவர்கள் என்ற எண்ணத்தை ஆசிரியர் கொண்டிருக்கலாகாது. பிள்ளைகள் இயலுமானவர்கள் என நம்புவதால் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை விருத்தி செய்ய வேண்டும் . அத்துடன் பிள்ளைகளைப் பாராட்டி மெச்சி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பிள்ளைமையச்சூழலில் ஆசிரியர் என்பவர் அறிவுறுத்துநர் என்பதைவிட ஒரு வசதிப்படுத்துநர் ஆவார்.அவர்களது பணி ஒவ்வொரு பிள்ளையின் ஆற்றல்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப ஆக்கபூர்வ கற்றல் சூழலை வழங்குதலுடன் கற்கப்போதுமான வாய்ப்புக்களை வழங்குவதுமாகும்.
மு.அபுஜிஹாத் (Dip.In.Teaching, B.ed(R)),
ஆசிரியர்,
மு/முல்லைத்தீவு மகாவித்தியாலயம்.