நாட்டினுடைய தேசிய அபிவிருத்தியில் சமூகமயமாக்கலின் பங்களிப்பு
–நிசார் பாத்திமா நிஸ்மினா
சூழலில் பழக்கப்பட்ட ஒரு நபர் அந்த சமூகத்தின் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் இசைவாக்கப்படுதல் சமூகமயமாக்கலாகும் என்ற கருத்துக்கிணங்க இன்றைய உலக நாடுகளானது பல்லின கலாச்சார அம்சங்களை கொண்டு விளங்குவதனால் சமூகமயமாக்கல் செயல்முறையினூடாக ஒருவரை ஒருவர் ஒத்து வாழ்வதோடு, முரண்பாடுகளை தவிர்த்து தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் ஒரு நுட்ப முறையாக சமூகமயமாக்களானது அடிக்கோடிட்டு காட்டப்படுகின்றது.
மனிதன் பிறப்பிலேயே சமூகப் பிராணியாவான் என்ற கருத்துக்கிணங்க அவன் தனித்து வாழ இயலாத ஒரு பண்பினை கொண்டவன். இன்றைய உலக நாடுகளானது பல்வேறு இன, மத, மொழி கலாச்சார பண்பாடுகளை பின்பற்றுகின்ற மக்கள் தொகுதியினரை தன்னகத்தே கொண்டுள்ளதன் விளைவாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டும் என்பது இன்றியமையாத தேவையாவும், இந்த தேவை முனைப்பை சீர் செய்வதாகவே சமூகமயமாக்கல் செயன் முறையானது காணப்படுகின்றது.
சமூகமயமாக்கல் செயல்முறையினூடாக ஏனைய மதம், ஏனைய மொழி, ஏனைய கலாச்சார மாண்புகளை ஒருவர் எவ்வளவு மதித்து வாழ்கின்றாரோ, அவ்வாறே தங்களுக்குரிய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக அன்றைய கிரேக்க காலம் தொட்டு மக்களின் போராட்டங்களின் விளைவாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதே இன்றைய ஜனநாயக ஆட்சி முறையாகும்.
பல்வேறு புரட்சிகளின் விளைவாக பெற்றுக் கொண்ட, இந்த ஜனநாயக ஆட்சி முறையின் பிற்பாடு மனித உரிமைகள் எனும் எண்ணக்கருவானது சமூகமயமாக்கலில் கல்வியின் விளைவாக மக்களுக்கு கிடைத்தது. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை என்ற வகையில் இந்த உரிமை கிடைப்பதன் வாயிலாக மக்களுக்கு தேவையான மற்றைய அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஜனநாயக ஆட்சி முறையை பொறுத்த வரையில் சமூகமயமாக்கல் இடம் பெறுவதன் வாயிலாக மனித உரிமைகளானது உலகில் வாழும் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் இன, மொழி, மத, சமூக அந்தஸ்து எனும் வேறுபாடுகளின்றி கிடைக்கப்பட்டதன் விளைவாகவே இன்றைய உலக நாடுகளானது அபிவிருத்தியடைவதற்கான பல்வேறு நடைமுறைகளும் அமுலிலூள்ளன. இவ்வாறான விளைவுகளினாலேயே என்று ஜனநாயகத்தின் தாயகமாக சுவிஷ்சர்லாந்து மதிக்கப்படுகின்றது.
சமூகமயமாக்கல் சமூக தாக்கங்களுக்கு ஏற்ப ஒருவரினுல் ஏற்படுத்தும் நெகிழ்வுத்தன்மை என்பதன் வாயிலாக, அன்றைய காலம் தொட்டு, பெண்களுக்கு வழங்கப்படாத பல்வேறு உரிமைகளை சமூகமயமாக்கல் சிந்தனையானது அறிஞர்களின் உள்ளங்களில் தோன்றியதன் காரணமாக பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வேறுபாடுகளையும் இல்லாதொழிக்கும் கட்டளை சட்டமானது 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைமுறைக்கு வந்தது. அதுவரை காலமும் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி என்ற ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பல்வேறு உரிமைகளும் ஏற்படுத்தப்பட்டது. உலகிலேயே முதல் பெண் பிரதமரை உருவாக்கிய பெருமை இலங்கை நாட்டுக்கு கிடைத்ததும் இவ்வாறான சமூகமயமாக்களின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இந்த கட்டளை சட்டத்தின் விளைவேயாகும்.
அடுத்து சமூகமயமாக்களானது உலகில் ஒரு இன, மொழி, பேதம், மதம் என்பதை தவிர்த்து, பல இன, மொழி, பேத மரபுகளை கொண்ட மக்கள் என்ற சிந்தனையை விதைத்ததன் காரணமாக அனைத்து வகையான இன வேறுபாடுகளுக்கும் எதிரான தீர்மானமானது 1969 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இன்று கூட வல்லரசு நாடுகளில் நிறவெறி, இனவெறி என்பன குடிகொண்டு காணப்படுகின்றது. வல்லரசு நாடுக்கே உதாரணமாக கூறப்படும் அமெரிக்காவில் கூட இந்நிலமை தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. இருந்தும் அனைத்து மக்களுக்கும் அரசியல், சமூக, பொருளாதர, கல்வி ரீதியிலான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு தீர்மானமாக இத்தீர்மானம் அமைந்ததன் விளைவாகவே அந்நாடும் இன்று தேசிய அபிவிருத்தியில் ஒரு வல்லரசு நாடாக வலம் வருகின்றது.
ஒரு நாட்டில் சாதாரண மக்கள் மாத்திரமல்ல விசேட தேவைகளை உடையவர்களும் உள்ளார்கள் என்பது சமூகமயமாக்கல் செயல்முறையினூடாக உலகிற்கு வெளிக்கொண்டுவரப்பட்ட உண்மையாகும். அவற்றினடிப்படையில் விசேட தேவைகளை உடையவர்களுக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்மானமானது 2008 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து உட்படுத்தல் கல்வியின் விளைவாக இன்று விசேட தேவைகளை உடைய மாணவர்களில் இயலாமை உடையவர்கள், மீத்திறனுடைய மாணவர்களுக்கான பல்வேறு முறையமர்வுகளும், பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளும் உலக நாடுகளில் நடைமுறையில் உள்ளன. விஞ்ஞான, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் சிறந்து விளங்குவதற்கும் இன்று ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளின் முன்னேற்றங்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகளானது ஒரு உந்துவிசையாக அமைந்தது.
சிறுவர் உரிமைகளை மீறுவதை தடுப்பதற்கான கட்டளை சட்டமானது 1981 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதனை தொடர்ந்து சித்திரவதைக்கு எதிரான தீர்மானம் 1987 ஆம் ஆண்டிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களதும், அவர்களது குடும்பத்தினருக்குமான உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம் 2003 ஆம் ஆண்டு கால பகுதியிலும் நடைமுறைக்கு வந்தது.
இவ்வாறான நடைமுறைகளை உலக நாடுகளானது சமூகமயமாக்கல் செயன்முறைகளை தங்கள் நாட்டில் ஏற்படுத்தி, அதனூடாக தேசிய அபிவிருத்தியை விரிவுபடுத்தும் நோக்கில் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றனவற்றில் சமூகமயமாக்களை தூண்டக்கூடிய கற்கை நெறிகளை உருவாக்கியதன் விளைவாக கலைத்திட்டத்தில் தனிப்பாடமாகவும், ஏனைய பாடங்களுடன் ஒன்றிணைந்த முறையிலும் சமூகமயமாக்கல் என்றால் இதுதான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக இன்றைய தேர்தல் முறைகள், ஊடக சுதந்திரம், சுதந்திரம், சமத்துவம் என்னும் கருப்பொருட்களில் அனைத்து இன, மத, மொழி பேதங்களும் நீங்கி செல்லும் ஒரு தன்மையினை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. இலங்கை கலைத்திட்டத்தில் சமூகவியல், அரசியல், குடியியற்கல்வி போன்ற பாடங்களில் கூட இந்த சமூகமயமாக்கல் செயன்முறையானது கற்பிக்கப்படுகின்றது.
சமூகத்தில் ஒரு மனிதருக்கு நடக்கும் உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் பல இன்று சட்டம் எனும் அரசின் மையப் பொருளால் நடைமுறைப்படுத்தப்படுவதன் விளைவும் இந்த சமூகமயமாக்களின் தன்மையினால் ஏற்பட்ட ஒரு அபிவிருத்தி கருப்பொருளாகும்.
சமூகமயமாக்களின் விளைவாகத்தான் ஒவ்வொரு நாடுகளும் தங்களது தேசிய அபிவிருத்தியில் நாட்டின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி, மனித வலுவுக்கு வலுவூட்டம் பெற்று, சிறுவரதும், பெண்களினதும் உரிமைகளை பாதுகாத்து, சிறுபான்மையினருக்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தேசிய இனங்களின் பாதுகாப்பையும், முன்னிலைப்படுத்தி, சட்டத்தினாட்சியை நடைமுறைப்படுத்தி, நேர்முகமான சமூக மாற்றத்துக்கும் இட்டுச் சென்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதன் விளைவாகத்தான் இன்று சர்வதேச மொழியான ஆங்கில மொழியினை உலக நாடுகளில் பெரும்பான்மையினர் கற்றுத் தேர்ந்து, சர்வதேச இணையவழி வியாபாரத்திலும் ஈடுபட்டு முன்னணியில் திகழ்கின்றனர். எந்த ஒரு நாட்டினதும் தேசிய அபிவிருத்தியில் இணையவழி வியாபாரம் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் என்பது இன்று தவிர்க்க முடியாத தன்மையிலுள்ளது. அவ்வாறே ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரக் கொள்கைகளையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சமூகமயமாக்களானது ஒவ்வொரு நாட்டினதும் தேசிய அபிவிருத்தியில் தேசத்தை முன்னணிக்கு இட்டுச் செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் நாளுக்கு நாள் செய்த வண்ணமேதான் உள்ளது. இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் வன்முறையினை தூண்டக்கூடிய சமூகமயமாக்கள் தன்மைக்கு இசைவாக்கமடைய விரும்பாத சிலரின் நடவடிக்கைகளின் விளைவாக பெண் அடிமைத்தனங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுபான்மையோருக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர் தேர்ச்சியாக நடந்த வண்ணமேதான் உள்ளது.
சமூகமயமாக்கல் என்பது ஒரு சமூகத்தில் வாழும் தன்மையினை ஒருவரினுள் பெற்றுக் கொள்வதற்கான திறன் வெளிப்பாடு எனக் கொள்வதன் வாயிலாக அச்சமுகத்திற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னணிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் மனிதர்களை ஈடுபடுத்த இந்த சமூகமயமாக்கல் தூண்டுகின்றது. நாட்டின் தேசிய அபிவிருத்தியினை ஊக்கப்படுத்தக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளும் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற ரீதியில் உலகில் ஏற்படுத்தப்பட்டு, இன்று உலக நாடுகளானது கல்வி வல்லரசுகளாகவும், தொழில்நுட்ப பொருளாதார வல்லரசுகளாகவும் திகழ்ந்து தேசிய அபிவிருத்தியில் முன்னணியில் நிற்பதற்கு இந்த சமூகமயமாக்களே உந்து சக்தியாக திகழ்ந்தது எனக் கூறினால் மிகையாகாது.
நிசார் பாத்திமா நிஸ்மினா,
நான்காம் வருடம்,
கல்வியியல் சிறப்புக் கற்கை,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்