யாழ்ப்பணத்தில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் முன்மாதிரியான அரச நிறுவனமான தேசிய கல்வியியல் கல்லூரியில் போலிக் கலாநிதிப் பட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மையை அறிந்து கொள்வதற்காக அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவரினால் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விபரங்கள் கோரப்பட்டு, குறித்த கலாநிதிப் பட்டம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி பட்டம் தொடர்பான ஆட்சேபனையையும் அதற்கு தேவையான தகவல்களும் நிறுவனத்தின் தலைவருக்கு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பாக நிறுவனத் தலைவர் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கலாநிதி பட்டம் தொடர்பான விபரத்தை உடனடியாக நீக்கி, கல்லூரியின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.