வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தமது விபரங்களை பணியகத்தின் இணையத்தளத்தில் உள்ளிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈர்ப்பதற்கான துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தரின் ஓய்வூதியம் மற்றும் சேவை மூப்புக்கு இடையூறு இன்றி வெளிநாடு செல்வதற்கு தேவையான சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கு அரச நிர்வாக அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று (06) முற்பகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர், அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.