• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home கட்டுரைகள்

சுய அபிவிருத்தியினூடாக வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவது எப்படி?

December 29, 2022
in கட்டுரைகள், TEACHING
Reading Time: 2 mins read
சுய அபிவிருத்தியினூடாக வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவது எப்படி?
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

சுய அபிவிருத்தியினூடாக வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவது எப்படி?

loga

How to improve the quality of life through self-development?

S.Logarajah (SLTES). Lecturer,

Batticaloa National College of Education

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரணமான போட்டி மிக்க இன்றைய கால கட்டத்தில் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது என்பது மிகவும் தேவையான ஒன்றாகவும், அதுவே சவாலான ஒன்றாகவும் அமைந்து விடுகின்றது. அந்த வகையில் நமக்கென ஒரு வழக்கமான செயல்முறையைத் தெரிந்தெடுத்து அதற்கேற்ப நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது பயனுடையது. அவ்வாறு அமைத்துக் கொள்வதனூடாக பல விடயங்களை நாம் கற்றுக் கொள்ளவும், அவற்றை வாழ்வில் அமுல்படுத்தவும் முடிவதுடன் நம்மை நாமே மெருகேற்றி அதனூடாக வாழ்க்கையின் தரத்தினையும் உயர்த்திக் கொள்ளலாம். அதற்கு வழிகாட்டும் வகையில் சுய அபிவிருத்தித் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு நாம் அறிந்திருக்க வேண்டிய, கைக்கொள்ள வேண்டிய விடயங்களை விளக்குவதாகவே  இக் கட்டுரை அமையப் பெற்றுள்ளது. சுய அபிவிருத்தித் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு நாம் அறிந்திருக்க வேண்டிய கைக்கொள்ள வேண்டிய விடயங்கள் உப தலையங்கங்களாக இங்கு தரப்பட்டுள்ளன.

எப்போதும் நேர்மறையான மனநிலையை வைத்திருப்போம் (Keeping a positive mind set)

நேர்மறையான மனநிலை என்பதனால் கருதப்படுவது வாழ்க்கையில் நடக்கும் எல்லா விடயங்களும் நமக்குச் சாதகமாகவும் நாம் நினைப்பது போலும், நமது திட்டத்தின் படியும் நடக்க வேண்டும் என்பதல்ல. மாறாக நடக்கின்ற ஒவ்வொரு விடயமும் அது சரியாக நடந்தால் அது எமது இலக்கிற்கு அண்மையில் அழைத்துச் செல்வதோடு, அது தவறாக நடந்தால் நம்மை நாமே இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும், சில வேளைகளில் நமது இலக்கினை மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்கும் உதவியாக இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையே ஆகும். இதனையே உளவியலின் ஸ்தாபக தந்தையர்களுள் ஒருவரான கார்ல் யுங் (CARL JUNG) Necessary Suffering என்கின்றார். அதாவது, ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான அளவில், சரியான விதத்தில், சோதனையும், வேதனையும் இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். அந்த கஸ்டங்களுக்கு நாம் உட்படும் போதுதான் நம்மை நாம் மெருகேற்றிக் கொள்ள முடியும். சோதனைகளும், வேதனைகளும் நமது வாழ்க்கையைக் கடந்து செல்லச் செல்ல அது நமது எதிர்காலத்திற்கு மிக முக்கியமான, அற்புதமான அடித்தளத்தை அமைத்துத் தரும் என்பதாகும்.

தவறுகளுக்கு சாக்குப்போக்கு சொல்வதைக் கைவிட்டு அதற்கான காரணங்களிலிருந்து  செயற்பாட்டுத் திட்டத்தைத் தீர்மானிப்போம். (Action Plan VS Excuses).

தவறுகளுக்குச் சாக்குப்போக்கு சொல்லத் தலைப்படுவோமானால் வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமுமே இருக்காது. மாறாக தவறுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அதிலிருந்து செயற்பாட்டுத் திட்டத்தை அமைத்துச் செயற்படுவோமானால் வாழ்க்கையில் தொடர்ச்சியான முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம்மில் பலர் ஒரே விதமான நிகழ்வுகளை எதிர்நோக்கலாம். ஆனால் அந்த நிகழ்வை நாம் எப்படி நோக்குகின்றோம் என்பதனூடாகவே ஒவ்வொருவரது வாழ்க்கையும் வேறுபட்டு நிற்கின்றது. இங்கு பெரும்பாலும் நாம் விடும் தவறு என்னவெனில் ஒரு விடயத்தில் தோற்றதற்குப் பிற்பாடு தோல்விக்கு சாக்குப்போக்கு சொல்வதுதான். நாம் சொல்லும் ஒவ்வொரு காரணமும் உணர்ச்சிபூர்வமானதாக இருப்பதோடு, நிகழ்வு சற்று மாறி நடந்திருக்கலாமே என்ற ஏக்கமும் இணைந்திருக்கும்;.  இதையே Excuses என்கின்றோம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சோகங்களை உதறித் தள்ளி விட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியே வந்து காரணங்களை காரணங்களாக மட்டும் பார்த்து அந்த காரணங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பது எப்படி என்பதை மட்டுமே சிந்திப்போமானால் அதிலிருந்து பிறப்பதுதான் செயற்பாட்டுத் திட்டம் (Action Plan)  சாக்குப்போக்கு சொல்வதில் காரணங்களை வைத்து மனதை ஆற்றிக்கொள்ள முற்படுகின்றோம். செயற்பாட்டுத் திட்டத்தில் அந்த காரணங்களை எப்படி நிவர்த்தி செய்வது? அவற்றைத் தாண்டி எப்படி வெற்றி பெறுவது? என்பதை கண்டறிய முற்படுகிறோம். ஆகவே தோல்விகளுக்குச் சாக்குப்போக்கு சொல்லாமல் அந்தக் காரணங்களை வைத்து எமது எதிர்காலத்தின் செயற்பாட்டுத் திட்டத்தை (Action Plan)  தீர்மானிப்போம் என்கின்ற மனநிலைக்கு நாம் வருவோமேயானால் கண்டிப்பாக எமது வாழ்க்கையில் வெற்றி மட்டுமே நிச்சயம்.

விருப்ப சக்தியை வளர்த்துக் கொள்வோம். (Developing Will Power)  

விருப்ப சக்தி (Will Power) என்பது எமது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஓர் விடயமாகும். நம்மிடமுள்ள கெட்ட பழக்கங்களில் பெரும்பாலானவை சோம்பல் அல்லது விருப்பமின்மை காரணமாகவே நிகழ்கின்றன. உலகத்தில் சாதனையாளர்கள் என்று நாம் கொண்டாடுகின்ற பல்வேறு மனிதர்கள்; மற்றவர்களால் நகைப்பிற்குள்ளானவர்களாகவே இருப்பார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான தோமஸ் அல்வா எடிசன் இதற்கு மிகச்சிறந்த உதாரண புருசராக எம் மனக்கண் முன் நிற்பதைக் காணலாம். இவ்வாறு யாருமே ஊக்கப்படுத்தாத, எந்தவொரு பின்னணியுமே இல்லாத, எங்கிருந்து வந்தார்கள் என்பதே தெரியாத அளவுக்கு இலை மறை காயாக இருந்த பலர் இமாலய சாதனைகளை படைத்திருப்பார்கள். இச்சாதனைகளை படைப்பதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது இந்த விருப்ப சக்தியே (Will Power) ஆகும். இந்த விருப்ப சக்திக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதன் முதலாவது பக்கம் யாதெனில், இலக்கை அடைய வேண்டும், சாதிக்கவேண்டும், வெற்றி பெற வேண்டும் என்கின்ற அழுத்தம் திருத்தமான அணையாத நெருப்பு மனதில் கொழுந்து விட்டு எரிதல் ஆகும். விருப்ப சக்தியின் இரண்டாவது பக்கம், எமது வரையறைகளை சிறிது சிறிதாக உயர்த்திக் கொள்ளுதல் (Raise your limit) ஆகும். இதனை நாம் பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். முதலாவதாக, உடல் ரீதியான வரம்பை உயர்த்துவதாகும். உதாரணமாக 100 மீற்றர்தான் ஓட முடியும் என்றால் அதனை 110 மீற்றர், 120மீற்றர், 130மீற்றர்… என சிறிது சிறிதாக கூட்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக மனதில் வரும் ஆசைகளை கட்டுப்படுத்துவதாகும். உதாரணமாக இனிப்புகளை சாப்பிடுவது விரும்பபென்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்பதை தீர்மானித்த பிற்பாடு அதனை எத்தனை நாளைக்கு எம்மால் தவிர்க்க முடிகின்றது என்பது. இவ்வாறு  வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய பெரிய இலக்கிற்காக தற்காலிகமான அற்ப விடயங்களை நாம் தியாகம் செய்ய வேண்டும். மூன்றாவது மனரீதியான திறமைகளை மேம்படுத்திக் கொள்வதாகும். எம்மால் எவ்வளவு நேரம் ஒரு விடயத்தைப் பற்றிப் பேச முடியும், எந்தளவுக்குத் தெளிவாகப் பேச முடியும், ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நேரம் கற்கின்றோம், எவ்வளவு நேரம் எம்முடைய அறிவை, வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள செலவிடுகின்றோம் என்பதாகும். அவ்வாறு நமது விருப்ப சக்தியை அபிவிருத்தி செய்யும் போது நமது இலக்கினை கண்டிப்பாக அடையலாம்.

வெற்றி மேல் வெற்றி பெற மென்மேலும் புன்னகைப்போம்.     (Smile more to win more)  

சிரிப்பு மற்றும் புன்முறுவல் (Laughter, Smile) இரண்டும் வேறுவேறானவை. சிரிப்பு (Laughter)  என்பது நமக்கானது. ஒரு சந்தோசமான நிகழ்வு நடைபெறும் போது அல்லது ஒரு நகைச்சுவையைக் கேட்கும் போது நமது மனது பூரிப்படைந்து உளம் மகிழ்ந்து சிரிக்கின்றோம். புன்முறுவல் (Smile) என்பது மற்றவர்களுக்காக நாம் செய்கின்ற ஒரு விடயமாகும். புன்முறுவலை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஓரளவுக்கு சரியாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் புன்முறுவலை கொஞ்சமேனும் தவறாகச் செய்வோமானால் அது மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். “ஏன் அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்” என மற்றவர்கள் பயப்படும் அளவுக்கு புன்னகைக்கக் கூடாது. கிட்டத்தட்ட இரண்டு செக்கன் கால அளவுக்குள் புன்னகைப்பதுதான் சிறந்த வினைத்திறனான புன்முறுவலாக இருக்கும். உதடுகளை வைத்துச் சிரிப்பதைக் காட்டிலும், பற்களை வைத்துச் சிரிப்பதைக் காட்டிலும் கண்களை வைத்து புன்னகைப்பதுதான் மிக முக்கியமானது. இது சற்றுக் கடினமானதாகத் தோன்றலாம். அதனை சரியாக செய்பவர்களைப் பார்க்கும் போது நமது மனதுக்குள் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். அப்போது அதுவே சரியான புன்முறுவல் என்பதை இனங்கண்டு கொண்டு அதனைச் செய்ய முற்பட வேண்டும். அத்தகைய புன்முறுவலால் மற்றவர்களுடனான ஆளிடைத் தொடர்பு மிகப் பெரியளவில் விருத்தியடையும்.

முடியும் வரை போராடுவோம்.  (100% Effort Every Time)

ஒரு விடயத்தில் இறங்கி விட்டால் முழு அர்ப்;பணிப்புடன்> முழுக் கவனத்தோடு அவ்விடயம் நிறைவுறும் வரையும் போராட வேண்டும். நம்மை குறித்த விடயத்தில் செயற்பட முடியாமல் தடுக்கும் காரணிகள் எவை என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். அதில் மிகவும் முக்கியமானது தயக்கம் (Hesitation) அதாவது செய்யலாமா? வேண்டாமா? என்ற சிந்தனை. அந்த சிந்தனை  இருக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த தயக்கம் வாழ்க்கை முழுவதும் இருக்கக் கூடாது. எனவே அதற்கு ஒரு நேர வரம்பை வைத்துக் கொள்ளுதல் வேண்டும். முடிவு எடுத்து விட்டோம் என்றால் நூறு சதவீதம் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு நாம் வரவேண்டும். நம்மிடமுள்ள நேரம், நம்மிடமுள்ள வளங்களைக் கொண்டு குறித்த விடயத்திற்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் முழுக் கவனத்துடன், முழு அர்ப்பணிப்புடன் செய்வதே 100% Effort ஆகும்.  இவ்வாறு செய்வதனால் பல நன்மைகளை நாம் பெற்றக் கொள்ளலாம் அதில் முதலாவது சமூகம் நம்மை அங்கிகரிப்பதாகும். (Credibility) அது மிகவும் முக்கியமானது. இரண்டாவது பயன் நம்பிக்கை. (Trust in self). ஒரு விடயத்தில் முழுக் கவனத்தோடு, முழு அர்ப்பணிப்போடு முடியும் வரை போராடும் போதுதான் நம்மீது நமக்கே நம்பிக்கை வரும். மூன்றாவது பயன் வெற்றியை பெற்றுத் தரும் அல்லது குறித்த விடயத்தில் வெற்றி பெற முடியாது எனும் தெளிவைப் பெற்றுத் தரும்.

பிறருடன் நேர்மறையான உறவை விருத்தி செய்து கொள்வோம். (Positive Relationship)

பிறருடனான நேர்மறையான உறவை விருத்தி செய்தல் எனும் போது  நாம் அதிகமான நண்பர்களை வைத்திருக்க வேண்டும்> அவர்களுடன் நிறைய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. அதிகம் பேசும் ஒருவராலும், அதிகம் பேசாத ஒருவராலும் கூட மற்றவர்களுடன் உறவுகளைப் பேண முடியும். இதற்கு நாம் பின்வரும் விடயங்களை பின்பற்றுதல் அவசியமாகின்றது. முதலாவதாக, நம்மை பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறு மற்றவர்களை நாம் நடத்த வேண்டும். இரண்டாவதாக, ஒருவரை முதன் முறையாகச் சந்திக்கும் போது அல்லது எதிர்கொள்ளும் அவர் நல்லவராகத் தான் இருப்பார். அவர் சரியாகத்தான் சிந்திப்பார், சரியாகத்தான் செய்வார் என அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மூன்றாவதாக, அவருக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடமிருந்து அதே மரியாதையை நாமும் பெற்றுக் கொள்ளலாம். நான்காவதாக, நாமும் வெற்றிபெற வேண்டும் மற்றவர்களும் வெற்றிபெற வேண்டும் என்ற Win – Win  மனநிலையை எப்பேதும் வைத்திருக்க வேண்டும். எதையெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவற்றைக் கொடுத்து எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டுமோ  அவற்றைப் பெற்றுக் கொண்டு இருவரும் வெற்றிபெற வேண்டும் என்ற சிந்தனையுடன் எல்லா உறவு முறைகளையும் கையாள வேண்டும். ஐந்தாவதாக, தொடர்பாடலில் நாம் அதிகம் பேசாது அதிகம் செவிமடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் பேசுவதை மற்றவர்கள் செவிமடுப்பார்கள். சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல. நமது மனதில் தோன்றும் விடயங்களை நேர்பட மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் சொல்லவும் நாம் தெரிந்திருக்க வேண்டும் மேலும் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

திறந்த மனதை விருத்தி செய்து கொள்வோம் (Develop an Open Mind)

நாம் மனதைத் திறந்து வைத்திருக்கும் போது நெகிழ்வுத் தன்மை உடையவர்களாகவும், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல> உணரும் உண்மைக்கு ஏற்றால்போல நம்மை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவர்களாக இருப்போம். இதனால் எந்த பிரச்சினையையும் இலகுவாக வெற்றி கொண்டு விடலாம். திறந்த மனதோடு இருந்தால் தான் மாற்றங்களுக்கேற்ப இலகுவாக நம்மை தகவமைத்துக் கொள்ளலாம். திறந்த மனதை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் பணிவு அல்லது தன்னடக்கம் மிகவும் முக்கியமானதாகும். “ தெரிந்தது கைமண்ணளவு தெரியாதது உலகளவு”என்பதுதான் நமக்குத் தெரிந்த உண்மைகளிலேயே மிகவும் ஆழமான உண்மை என்பதை புரிந்து கொண்டோமேயானால் நாம் இந்த உலகத்தை நோக்குகின்ற கண்ணோட்டமே மாறிவிடும்.

வாழ்க்கையில் எதற்காக ஓடுகின்றோம் என்பதைச் சிந்திப்போம் (Mission in Life)

நாம் எல்லோருமே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றோம் என்பது சில நேரங்களில் எம்மில் பலருக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. எனவே Mission in Life என்பது மிகவும் முக்கியமானது. இதனை நாம் மூன்று கூறுகளாக நோக்கலாம். அதில் ஒன்று எமக்கு எது முக்கியம்? உண்மையாகவே எமது எதிர்பார்ப்பு என்ன? எமது குடும்பத்தின் எதிர்பார்ப்பு என்ன?  என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். அடுத்து அந்த எதிர்பார்ப்புக்களை  எப்படி அடையப் போகின்றோம். எந்தெந்த வயதில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துவதோடு நாம் வாழ்ந்து முடிந்த பின்னர் இவ்வுலகிற்கு எதனை விட்டு விட்டுச் செல்லப் போகின்றோம் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட நாம் மற்றவர்களுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்பதே முக்கியமானதாகும். அடுத்து அந்த எதிர்பார்ப்புக்களை அடைய நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகள், விழுமியங்கள் என்ன என்பது பற்றியும் உறுதி பூண வேண்டும். உதாரணமாக நேர்வழியில் அன்றி குறுக்கு வழியில் முயற்சி செய்யமாட்டேன் என்பது.

இறுதி இலக்கை நோக்கியே சிந்தப்போம்.  (Big Picture Thinking)

Big Picture Thinking என்பது பெரிதாக சிந்திக்க வேண்டும், பெரிதாக செய்ய வேண்டும்> இப்போது இருப்பதை விட பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதல்ல. மாறாக நாம் மேற்கொள்ளுகின்ற பல்வேறுபட்ட செயல்களை எதற்காக, எதனை அடைவதற்காக மேற்கொள்கின்றோம். அதாவது இறுதி இலக்கு என்ன என்பது குறித்து சிந்திப்பதாகும்.

கடந்தகால வலிகளை கடந்து வருவோம் (Letting it go)

நமது வாழ்க்கையில் எமக்கு அதிக வலியைத் தந்த பல தருணங்கள் இருந்திருக்கலாம். இந்த வலிகளை விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் எந்த விடயத்திலும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது. என்ற நிதர்சனமான உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் என்னால் முடிந்தளவு முயற்சி செய்தேன் ஆனாலும் நான் நினைத்தது போல் சில விடயங்கள் நடைபெறவில்லை. என்ற நம்பிக்கையும், எண்ணமும் இருந்தாலே போதும் அதுவே நம்மைக் காப்பாற்றும். வலிகள் நிறைந்த நினைவுகளை விட்டுவிடுவது இலகுவானல்ல. ஆகையால் தொடக்க தருணங்களில் வாய்விட்டு அழ வேண்டுமானாலும் அழுது விடலாம், நம்பிக்கையான ஒருவரிடம் அல்லது ஒரு ஆலோசகரிடம் வேதனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். அதிலொன்றும் தவறில்லை. அவ்வாறு செய்யும் போது நாம் அந்த வலிகளை ஓரளவுக்கேனும் முகாமை செய்யக்கூடிய நிலைக்கு வருவோம். அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொண்டு வலிகளை தாண்டி வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

பொறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வோம்   (Taking 100% Responsibility)

நாம் தொடர்புபட்டுள்ள விடயங்களுக்கு நாமே பொறுப்பு. அதனைச் சரியாகச் செய்து முடிப்பது நம் கைளில்தான் உள்ளன. அவற்றை நாமே செய்துமுடிக்க வேண்டும் என்கின்ற உரித்துடமையே பொறுப்புணர்ச்சி ஆகும். பொறுப்புணர்ச்சியை நாம் கையிலெடுக்கும் போது நாம் பிரச்சினை குறித்து சிந்திப்பதை விட பிரச்சினையிலிருந்து வெளிவரும் வழிவகைகள் குறித்தே சிந்திப்போம். அதனால் எமது கண்களுக்கு பிரச்சினை தென்படுவதை விட அதற்கான தீர்வுகளே தென்படத் தொடங்கும். அப்போது நாம் முன்னோக்கிச் செல்லலாம். இதனால் வரக்கூடிய மிகப்பெரிய பயன் யாதெனில் நாம் பொறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்கின்ற போது மற்றவர்கள் எம்மை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்.

யதார்த்த சிந்தனையை விருத்தி செய்து கொள்வோம் (Developing Practical Thinking)

நாம் வாழ்க்கையில் பெரும் முடிவுகளை எடுக்கும் போது என்னதான் மனதுக்குள் சரி எனத் தோன்றினாலும், ஒருமுறையாவது அதுகுறித்து சிந்தித்துப்பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து  உண்மையான வாய்ப்பு, சாத்தியம் குறித்து சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதுபோல எமது எதிர்பார்ப்புக்களையும் யதார்த்தபூர்வமாக வைத்துக்கொள்வதோடு சார்புத் தன்மை இல்லாமல் காரண காரிய அடிப்படையில் நாம் சிந்திக்கவும் வேண்டும்.

நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம். (Stop comparing our self)

நாம் தனிச் சிறப்புமிக்கவர்கள் எனவே நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறத்துவோம். வெற்றி என்பதை விட மனநிறைவு, சந்தோசம் எனும் கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போது நமது தனிச் சிறப்பை நாம் கண்டு கொள்ளலாம். நாம் மட்டுமல்ல ஒவ்வொருவரும் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மற்றவர்களைப் போல் மாற வேண்டும் என்பது அவசியமல்ல. நம்மை நாமே மெருகேற்ற வேண்டும் என்பதே அவசியமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை மற்றவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம் (How others see us)

நம்மிடம் என்னதான் திறமை இருந்தாலும் நம்மை மற்றவர்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்பதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். நாம் எப்படி இருக்கின்றோம்> எப்படி இருக்க நினைக்கின்றோம், நம்மை எப்படி சமூகம் நோக்குகின்றது ஆகிய மூன்று விடயங்களும் மிக முக்கியமானவையாகும். எமது உடை மட்டுமல்ல பேசும் வார்த்தைகள், பேசும் விதம், நாம் யாரைச் சுற்றியிருக்கின்றோம். என்பது குறித்து சமூகம் என்ன கண்ணோட்டத்தை வைத்திருக்கின்றது என்பதை தெரிந்திருந்தாலே நம்மை நாம் அதற்கேற்றாற்போல் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

நமது நேரத்திற்கு நாமே அதிபராவோம்.  (Mastering our time)

நேரத்தை முகாமை செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதை வாழ்க்கையில் அமுல்படுத்த முடியவில்லை எனும் பிரச்சினையே நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையாகும். நாம் வாழ்க்கையில் நகர்வதற்கு நேரம் மிகவும் அவசியமானதாகும். நாம் மகிழ்ச்சியாக கழிக்கும் தருணங்கள் வீணானவை அல்ல. அது வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் தருணங்கள். ஆனால் நமது நேரத்திற்கு நாம் அதிபராக அல்லாமல் பிறர் இழுக்கும் பக்கமெல்லாம் நாம் செல்வோமானால் நமது நேரம் வீணாகத் தொடங்கும். எனவே நேரத்தை முகாமைத்துவம் செய்யத் தொடங்கினாலே பல பிரச்சினைகள் எம்மை விட்டு தொலைந்து போகும். அதுமட்டுமன்றி வாழ்க்கை நமதாகி விடும். அதற்கு நாம் 80:20 விதியை பின்பற்றலாம். 80 சதவீத விடயங்களுக்கு 20 சதவீத நேரமே தேவையாகும், 20 சதவீத வேலைகளுக்கு 80சதவீத நேரம் தேவையாகும் என்பதே 80:20 விதியாகும். எனவே இவ்விதியை சரியாக புரிந்து கொள்வதும், சரியாக அமுல்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும்.

சுய ஒழுக்கத்தை விருத்தி செய்து கொள்வோம் (Developing self Discipline)

ஒழுக்கம் பற்றி பலராலும் அதிகம் பேசப்பட்டாலும் சுயஒழுக்கமே எல்லாவற்றிலும் மேன்மையானதாகும். ஒழுக்கம் என்பதையும் கீழ்படிவு என்பதையும் பலர் இணைத்துப் பார்ப்பதுமுண்டு. பிறர் சொல்பேச்சுக் கேட்பது, உலக நியதிப்படி வாழ்வது, ஊரிலுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுப்படுவது இவையே ஒழுக்கம் என பலரும் நினைப்பதுண்டு. அது மட்டுமல்ல சுகாதாரம், நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை போன்றனவும் ஒழுக்கமாக கருதப்படுவதுமுண்டு. ஆனால் சுயஒழுக்கம் என்பது மற்றவர் வரைந்த கோட்டுக்குள் நின்று கொள்வதல்ல. மாறாக நமது வாழ்க்கைக்கு என்ன கோடு தேவை என்பதை அறிந்து நாமே கோட்டை வரைந்து அதன்மேல் நின்று கொள்வதே சுயஒழுக்கமாகும். சுயஒழுக்கத்தை நாம் வளர்த்துக் கொள்வதற்கு முதலில் செய்ய வேண்டியது நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை அமைத்துக் கொள்வதாகும். அதை விட எந்தெந்த தருணங்களில் சுய ஒழுக்கத்தை மாற்றப் போகின்றேன் என்பதை முன்கூட்டியே கணித்துக் கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் சுய ஒழுக்கத்தை எம்மால் பின்தொடர முடியும். அவ்வாறு பின்தொடரும் போது அது நம்மை சமநிலைப்படுத்தும். என்ன பிரச்சினை வந்தாலும் நாம் அதிகம் குழம்பமாட்டோம், அதிகம் பதற்றமடைய மாட்டோம். ஆனாலும் எமது இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்போம். வெற்றியை எந்தவொரு தலைவலியும் இல்லாமல் இலகுவாகப் பெறுவதற்கு சுயஒழுக்கம் பயனுடையதாக இருக்கும்.

நமது வாழ்க்கையை நாமே செதுக்குவோம் (Sculpt our life)

நமது வாழ்க்கையை நாம் நினைத்தது போல நமது பாணியிலேயே வாழ வேண்டும். நாம் தனித்துவமானவர், விசேட தன்மையுடையவர் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.  எனவே நமது வாழ்க்கையை நாமே செதுக்க வேண்டும்.

அதற்கு மேற்சொன்ன சுயமேம்பாட்டுக்கான கருவிகள் அனைத்தும் கண்டிப்பாக நமக்குத் துணை செய்யும். அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும், குறித்த ஒழுங்கில்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. எமக்கு எது தேவையோ எப்பொழுது தேவையோ அவற்றைக் கற்று வாழ்வில் அமுல்படுத்துவதனூடாக நம்மை நாமே மெருகேற்றி அதனூடாக வாழ்க்கையின் தரத்தினையும் உயர்த்திக் கொள்ளலாம்.

Previous Post

Appointment of Graduates to Teaching Service – Proposal Submitted to Cabinet

Next Post

Appointment for the post of Railway Masters (Grade 111)

Related Posts

21st Century Education and Sri Lankan Schools

21st Century Education and Sri Lankan Schools

March 18, 2023
21st Century Skills and School Leaders

21st Century Skills and School Leaders –

March 16, 2023
21st Century Education

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி – 21st Century Education

March 12, 2023
Flipped Classroom – புரட்டப்பட்ட வகுப்பறை

Flipped Classroom – புரட்டப்பட்ட வகுப்பறை

March 12, 2023
Next Post
Appointment for the post of Railway Masters (Grade 111)

Appointment for the post of Railway Masters (Grade 111)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

கோவிட் அதிகாரிப்பு: பாடசாலைகளை தொடர்ந்து நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் தெளிவுபடுத்தல்

April 21, 2021

மட்டக்களப்பில் வெளிவாரிப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

July 28, 2019

தரம் 4 புதிய பாடத்திட்டம் – கணிதம் ஆசிரியர் வழிகாட்டி

December 28, 2018
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Release of Development Officers and MSOs on Secondment basis for the Sri Lanka Ports Authority
  • Extreme Hot weather – Health guidelines for students
  • Soon – Grade 5 Scholarship Cut-off Marks

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!