தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் தடுப்பு மருந்து திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவதனா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான தடுப்பாக HPV vaccine பயன்படுத்தப்படுகிறது. இது 2017 ஆம் ஆண்டு தேசியளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கர்ப்பப் பை வாய் புற்றுநோய் இலங்கை மகளிரிடையே பொதுவாகக் காணப்படும் இரண்டாவது பெரிய புற்று நோய் வகையாகும். முதலாவது வகை மார்பு புற்றுநோயாகும் என்று அவர் கூறினார்.
வைத்தியர் பபா பலிஹவதனா அண்மையில் இலங்கை வைத்திய ஒன்றியத்தில் நடைபெற்ற உலக புற்று நோய் தினம் 2019 தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவற்றைத் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பு பிரதேச தேசிய பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் இத்திட்டத்திற்கு உதவுதில்லை என்று குற்றம் சாட்டும் அவர் பெற்றோர் முன்வந்து இதனை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கேட்டுக்கொண்டார்.
11 வயது முதல் பெண்பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனவே, தரம் 6 கற்கும் பிள்ளைகளின் பெற்றோர் இந்த தடுப்பூசியை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
2018 ஆம் ஆண்டு 29843 பேர் புற்று நோய் தொடர்பாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 வருடங்களுடன் ஒப்பிடும் போது பெரியதொரு வளர்ச்சி அவதானிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு 28931 பேர் புதிதாகப் பதிவு செய்யப்பட்டனர்.
2016 ஆம் ஆண்டு 29457 பேரும் 2015 ஆம் ஆண்டு 28474 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.