நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் 10 வருடங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றைக் கோரவும் அரச ஊழியர்களுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.
இதன்படி, நிறைவேற்று அதிகாரம் முதல் பிரதேச சபை உறுப்பினர், அமைச்சின் செயலாளர் முதல் கீழ்மட்ட அதிகாரி வரையிலான அனைவருக்கும் சலுகைகளை வழங்குவதை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும், இது பொதுவான நிகழ்ச்சி நிரலை அனுபவிக்கும் காலம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் பணிக்கு வருவதே செலவாகும் எனவும், போக்குவரத்துச் செலவுகள் மாதந்தோறும் அதிகரித்து வருவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார். சுமார் 30 வருடங்கள் அரச சேவையில் யாரேனும் இருந்தால், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு குறைந்த பட்சம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், குறிப்பாக கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது அடுத்த மாதம் மேலும் நெருக்கடிகள் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல்மாகாணத்தை எடுத்து நோக்கினால் நெல் உற்பத்தி 10 வீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்த திரு.மாயாதுன்ன, எஞ்சிய 90 வீதம் ஏனைய மாகாணங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நாம் இன்று எரிமலையில் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன்போது, நாம் அனைவரும் எங்காவது பயிர்களை பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போதைய நிலைமையை புரிந்துகொள்வது அவசியம் எனவும், தற்போது சுமார் 50 வீதமானவர்கள் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.