ONLINE கல்வி, தொலைக்காட்சி கல்விச் சேவைகள் அனைத்து மாணவரையும் சென்றடைகின்றனவா?
கற்பிக்காத பாடத்துக்காக மாணவருக்கு பரீட்சையை நடத்துவது நியாயமாகுமா? ஓகஸ்ட் உயர்தரப் பரீட்சை நடத்துவதில் இன்னும் எதுவுமே புரியாத குழப்பம்! ONLINE, தொலைக்காட்சி கல்விச் சேவைகள் அனைத்து மாணவரையும் சென்றடைகின்றனவா? இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் க.பொ.த.உயர்தரப் பரீட்சையை வழமை போன்று நடத்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முன்னரைப் பகுதியில் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பித்துள்ள நிலையில், இப்பரீட்சை நடத்தப்படுவது நியாயமா, இல்லையா என்பது தொடர்பில் பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இருவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
பரீட்சை பின்போடப்பட வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் அபிப்பிராயம் ஆகும். மற்றொரு தரப்பினர் பூர்த்தி செய்யப்பட்ட பாடப்பரப்பிற்குள் மட்டும் வினாப்பத்திரங்களைத் தயாரித்து பரீட்சையை நடத்த வேண்டும் என்கின்றனர். இவ்விரு கருத்துகளிலும் நியாயப்படுத்தக் கூடிய வாதங்களை முன்வைக்க முடியும். இந்த இரண்டு ஆலோசனைகளில் எதனை பரீட்சைத் திணைக்களம் செயற்படுத்தும் என்பது இன்னும் பரீட்சார்த்திகளுக்கோ பெற்றோர்களுக்கோ தெரியாதுள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலருக்கும் இது குழப்பமாகவே உள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தி வரும் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம், க.பொ.த.உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகள் மிகவும் நம்பகமாகவும் தரமானதாகவும் நடைபெற்று வருவதை அனைவருமறிவோம்.
இந்த நிலையில், சமகால கொரோனா நெருக்கடி நிலையிலிருந்து நாடு இன்னமும் முற்றாக விடுபடவில்லை.
பாடசாலைகளைப் பொறுத்தவரை இவ்வருடத்தில் மாணவர்கள் கற்றல் நிலைமைகளிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் நிகழ்நிலை (ழுடெiநெ) , தொலைக்காட்சி கல்விச்சேவை என்று நடத்தப்பட்டாலும் அவையனைத்தும் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளனவா என ஆராயும் போது விடை கேள்விக்குரியதாகின்றது.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை கொரோனா பீதிக்கும் எத்தனையோ வசதியீனங்களுக்கும் மத்தியில் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டு வைத்தமை பாராட்டுக்குரியது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்பூஜித மற்றும் அவரது குழாத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களேயாவர்.
இவ்வருட க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பல்வேறு நியமங்கள் கருத்திற் கொள்ளப்பட்டாலும் குறித்த பரீட்சைக்கான பாடவிதானம் வகுப்பறையில் கற்பிக்கப்பட்டுள்ளதா? பரீட்சைக்கு மாணவர்கள் தயாரா? அல்லது இவற்றுக்கு போதுமான காலம் இருக்கிறதா? இயல்பான சூழலில் பரீட்சை நடைபெறுமா? என்பதெல்லாம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
சரி, இவ்வருடத்தில் அடுத்ததாக இடம்பெறவிருக்கும் பொதுப் பரீட்சைகளாக தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பன இருக்கப் போகின்றன.
தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலத்துள் கற்பிக்கப்பட்ட பாடப்பரப்பிற்குள் வினா அமையுமென தெரிவிக்கப்பட்டிருப்பது ஓரளவு திருப்தியாகவுள்ளது.
எனினும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற முக்கிய பரீட்சையாகத் திகழும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்கள் பற்றி இன்னும் தீர்க்கமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
உயர்தரப் பாடங்களில் பொதுவாக 12 அலகுகள் காணப்பட்டால் இறுதி 3 அலகுகள் இன்று பாடசாலைகளிலோ தனியார் நிலையங்களிலோ கற்பிக்கப்படாத சூழ்நிலையே காணப்படுகின்றது. அதற்கான காரணம் யாவரும் அறிந்ததே.
முழுப்பாட அலகுகளையும் கற்காத ஒரு மாணவனிடம் முழுப்பாட அலகுகளுக்கான வினாக்களை உள்ளடக்கிய வினாப் பத்திரங்களை பரீட்சையின் போது வழங்குவது நியாயமாகுமா? அதுபரீட்சை நியமமாகுமா?
இது தொடர்பாக மாணவர் பால் அக்கறையுள்ள தொழிற்சங்கங்களில் ஒன்றான இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
மறுபக்கத்தில் சிந்திக்கின்ற போது, முதல் 8 அலகுகளுக்கான வினாப்பத்திரங்களை மாத்திரம் உள்ளடக்கிய வினாப் பத்திரத்தை வழங்கி பரீட்சையை நடத்த முற்படலாம் என்பதுவும் நியாயமானதாகவே தெரிகின்றது.
ஆனால் இவ்வாறான பரீட்சையானது அதற்குப் பிந்திய பல்கலைக்கழகக் கல்வி அல்லது மேற்படிப்பிற்குத் தடையாக அமையாதா? அதாவது இறுதி அலகுகளை அறவே கற்காத மாணவரால் மேற்படிப்பை இலகுவாகத் தொடர்வதில் சங்கடங்கள், பாதிப்புகள் இல்லாமலிருக்குமா?
அண்மையில் இப்பரீட்சை நடத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மாணவர்க்கு போதுமான தெரிவுகளை அதாவது உhழiஉந வழங்கி வினாப்பத்திரங்களை வழங்கலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
உண்மையில் இந்த ‘தெரிவு’ என்பது கட்டுரை வகை வினாக்களுக்கே பொருந்தும். மாறாக பல்தேர்வு வினாக்களை உள்ளடக்கிய முதல் பத்திரத்திற்குப் பொருந்தாது.
தற்போதும் இப்பரீட்சை தொடர்பில் பல உயர் மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்பதை ஊடகங்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் இந்தமுறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
அவர்கள் ஒரு புறம் பூரணமாக பாடத் திட்டத்தை அதாவது பாடப்பரப்பை பூர்த்தி செய்யவில்லை. மறுபுறம் படித்த பாடத்தையாவது மீட்டல் செய்வதற்கோ பயிற்சி செய்வதற்கோ போதிய உளவியல் களநிலைவரம் இன்றைய வேளையில் இல்லை.
தயார்நிலை என்பது கல்வி உளவியல் பரப்பில் பேசப்படும் சொற்பதமாகும். ஒரு மனிதனுக்கு எதற்கும் தயார்நிலை வேண்டும். அதே போல ஒரு மாணவன் கற்பதற்கும் பரீட்சை எழுதுவதற்கும் தயார் நிலை வேண்டும்.
இன்றைய கொரோனா காலகட்டத்தில் இத்தயார் நிலை என்பது எத்தகையதாகவிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் நிம்மதியாகவிருந்து கற்கும் சூழ்நிலை உள்ளதா? கொரோனா ஊரடங்கு, பீதி, உணவுக்கு திண்டாடும் நிலை… இவ்வாறு நெருக்கடிகள் ஏராளம்.
இந்த நிலையில் அவர்களால் இயல்பாக வழமை போன்று கல்வி கற்க முடியுமா? மறுபுறம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற இப்பரீட்சையை ஒட்டுமொத்தமாக முழுவீச்சுடன் முழுமையாக நடாத்த முடியுமா? இவையெல்லாம் விடை புரியாத வினாக்கள்.
இதேவேளை அடுத்த ஓகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சையைச் சந்திக்கப் போகும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் அல்லது இந்த 7 மாத காலம் இழந்த கற்றல்அலகுகளை துரிதமாக பூர்த்தி செய்யக் கூடிய நடவடிக்கைகளும் கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எதிர்வரும் ஓகஸ்ட்டில் நடத்த உத்தேசிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது அனுகூலமாகவிருக்கும் என கல்வியியலாளர்களும் பெற்றோர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே பரீட்சைத் திணைக்களம் மாணவர்களை மையமாக வைத்துச் சிந்தித்து நியாயமாகச்செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
(பிரதி செய்யப்பட்டது)
வி.ரி. சகாதேவராசா