கிளிநொச்சி தெற்கு வலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சீர்கேடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஆரம்பக் கல்வி மற்றும் விசேட கல்வி ஆசிரியர்களுக்கு, 15.06.2022 அன்று “உட்படுத்தல் கல்வி” தொடர்பான செயலமர்வு என்னும் போர்வையில் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் தனியார் விருந்தகம் ஒன்றில் செயலமர்வொன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அது நடைபெற்றிருக்கவில்லை.
செயலமர்வு நிறுத்தப்பட்டமை தொடர்பாக ஆசிரியர்களிற்கு அறிவிக்கப்பட்டிருக்கவு மில்லை.
அறிவிக்கப்படாததன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து அதிக பணம் செலவழித்துச் சென்ற ஆசிரியர்களிற்கு, குறிப்பிட்ட விருந்தக பணியாளர்களால் செயலமர்வு இல்லை என அறிவுறுத்தப்பட்டு, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். இன்றைய பொருளாதார சுமைகளைத் தாங்கி, எரிபொருள் தட்டுப்பாட்டினால் எரிபொருள் நிரப்ப வழியின்றியும், வரிசையில் நின்று எரிபொருள் பெற்றும் கடினமான நெருக்கடிகளுக்கு ஆசிரியர்கள் முகம்கொடுத்துவரும் இன்றைய நெருக்கடியில் கூட, கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனையினரின் பொறுப்பற்ற செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் அடுத்துவரும் இரு தினங்கள் செயலமர்வுக்கு வருமாறு ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் பாடசாலை நாட்களின் 3 நாட்களும் ஆசிரியர்கள் பாடசாலை செல்லமுடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நட்ட ஈடு உள்ளிட்ட பொருத்தமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்கு கல்வி அபிவிருத்திக்கென பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை வடமாகாணக் கல்வி யமைச்சு நீண்ட காலமாக நியமிக்காமல் உள்ளமையும் இதுபோன்ற தவறுக்கு மற்றொரு காரணமாகும்.
இதனால் அதிபர் ஆசிரியர்களுக்கு தகவல் பரிமாற்றம் சரியாக வழங்கப்படாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்விடயங்களுக்கு உடனடியான தீர்வு வழங்கப்படவேண்டும்.
ஆ. தீபன் திலீசன்,
உப தலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.