சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு 33 பில்லியன் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகவும், போராட்டங்களில் ஈடுபடாது அவர்கள் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்துவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையேற்றம் காரணமாக அருகாமையில் இருக்கும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு மட்டும் தாக்கம் செலுத்தும் காரணியன்று.
கொவிட் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் போராட்டங்களை நடாத்துவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.