தற்போதைய நெருக்கடி நிலமையின் கீழ் பாடசாலைகளை தொடர்ந்தும் நடாத்துவதற்கான மாற்று திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கத் தவறிவிட்டதாகவும் அதன் காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருதாகவும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்தும் பாடசாலைகளை நடாத்திச் செல்லும் வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நெருக்கடிகளைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளைக் குறிப்பிட்டு கல்வி அமைச்சருக்கு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகள் வருமாறு
- பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயண வசதியை வழங்கும் சிசு சரிய திட்டத்தை விஸ்தரித்து ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையாக நடாத்திச் செல்லல். தற்போது ஒரு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 62 ரூபாயாக அதிகரித்தல்
- தேசிய மாகாணப் பாடசாலைகளின் இடமாற்றத்திற்கான தற்போதைய சிக்கலான ஒழுங்கை ரத்துச் செய்து விட்டு பாடசாலையின் ஆசிரியர் வெற்றிடம் மற்றும் ஆசிரியர்களின் நிரந்தர வதிவிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இடமாற்றத் திட்டம்
- பாடசாலை நேரத்தை அதிகரித்து பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்
- நாளாந்த நேரசூசியை மீள ஒழுங்குபடுத்தி, ஆசிரியர்களை கடமைக்கு அழைக்கும் நாட்களைக் குறைத்தல்
- எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக ஆசிரியர்களுக்கு மிதிவண்டி மற்றும் இலத்திரனியல் மோட்டர் சைக்கிள் பெற்றுக்கொள்ள வசதிகள் மேற்கொள்ளல்
- உள்வீதிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ள ஆசிரியர்களுக்காக உள்வீதி பஸ்போக்குவரத்தை ஒழுங்கு செய்தல்
இந்த திட்டங்கள் தொடர்பாக கருத்திற்கொள்ளுமாறும் இவை தொடர்பாக கலந்துரையாடல்கள் தேவை எனில், அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.