பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தெளிவான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருகை வீழ்ச்சி 30-40 வீதமாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவு இன்மை மற்றும் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாகவே இந்நிலைமை தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களின் விரை வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளமையினால் தமது பிள்ளைகளுக்கு உணவை வழங்கிக் கொள்ள முடியாமல் பல பெற்றார்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக பிரபல பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட பல மாணவர்கள் கிராமியப் பாடசாலைகளுக்கு இடம்மாறி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலைக் கூட்டத்தின் போது மயங்கி விழும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காரணப்படுவதாகவும் அவர்கள் காலை உணவு இன்றி பாடசாலைக்கு வருகை தந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
60 வீதமான மாணவர்கள் பாடசாலைக்கு பகலுணவு கொண்டுவருவதில்லை என்று குறிப்பிட்ட அவர், பொருளாதாரப் பிரச்சினைகள் மாணவர்களின் வரவை மாத்திரமல்லாது ஆசிரியர்களின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையில் வாழும் ஆசிரியர்கள் தமது மாணவர்கள் மீது அவற்றைப் பிரயோகிக்கும் நிலை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இது பல பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனினும், பகலுணவு வழங்கப்படும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 90 வீதத்தை கடந்து காணப்படுவது கவனத்துக்குரியது என இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளார்.