பல்கலைக்கழகங்களுக்கும் உயர் கல்விக்குமான உள்ளீர்ப்பு இஸட் புள்ளிகளினால் மாத்திரம் தீர்மானிக்கப்படக் கூடாது என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 1379 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்
“எமது பல்கலைக்கழக வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் பின்னர், பல்கலைக்கழக வளங்கள் வரையறைக்குட்பட்டு மாணவர் உள்ளீர்ப்பு முறை மாற்றியமைக்க வேண்டும். அடிப்படைக் கட்டுமானம், தொழிநுட்பம் மற்றும் மானிட வள மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முதலீட்டின் ஊடாக உயர் கல்வித் துறையின் இயலுமையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும்.
பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதிகத மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்களை வழங்க முடியும். உயர் கல்வி வாய்ப்புக்கள் இஸட் புள்ளிகளால் மாத்திரம் தீர்மானிக்கப்பட இடமளிக்கக் கூடாது. மாறாக திறமைக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.