பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமாறு பெற்றாரையும் வெளித்தரப்பினரையும் வற்புறுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்காக பாடசாலைகளின் உத்தியோகபூர்வ தொலைதொடர்பு சாதனங்கள் பயன்படுத்தி பெற்றார் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட் அச்சுறுத்தல் இன்னமும் நீங்காத நிலையில் பெற்றாரை ஒன்று கூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முன்னெடுப்பு சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்டதல்ல என்பதோடு, இவ்வாறு பாடசாலை சார்ந்த பெற்றாரையும் மாணவர்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைப்பது, இதுவரை வாண்மைத்துவ ரீதியாகப் பெற்றுக் கொண்ட மதிப்புக்கு பொருத்தமில்லை என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்கள் என்ற அடிப்படையில் தமது சம்பள உயர்வுக்காக பிறரைத் தூண்டிவிடுவது சட்டவிரோதமானது என்பதோடு, நிலையியற் சட்டங்களின் அடிப்படையில் ஒழுக்காற்றுக்குரிய குற்றமாகும். இவ்வாறான ஆர்பப்பாட்டங்கள் பாடசாலைக்குள் நடைபெறாமல் காத்துக் கொள்வது அதிபர்களின் பொறுப்பகும்.
இந்த கொவிட் நிலமையில் போராட்டங்களில் ஈடுபடுவது நிலமையை தீவிரமாக்கலாம் என்பதை பெற்றாருக்கு எடுத்துரைக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.