அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகளில் முறைகேடுகள், நிதி வீண்விரையம், மோசடி அல்லது தரமற்ற கட்டுமானப் பணிகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக பிரச்சினைகள் முறைப்பாடுகளை சமப்பிக்க முடியும்.
இவற்றை கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் தலைமை பொறியிலாளரிடம் சமர்ப்பிக்க முடியும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை கட்டமைப்பை நாட்டில் முன்னெடுத்து தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வித்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி திட்டம் இதுவாகும். இதன் மூலம் நாட்டில் தேசிய மற்றும் மாகாண மட்டத்திலும் ஒன்பதாயிரத்து 64 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 65 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பௌதீக வளம், அடிப்படை வசதிகள் மனித வள அபிவிருத்தி ஆகியன இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் பாடசாலை கட்டமைப்பு, ஸ்மாட் வகுப்பறை, இரண்டு மாடிக் கட்டடம் மற்றும் மூன்று மாடிக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை, அதிபர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லம், ஆரம்ப கல்விக்கான வளமத்திய நிலையம், விளையாட்டுக் கட்டடத் தொகுதி உள்ளிட்டவற்றை கொண்டு ஆயிரத்து 400 கட்டடத் தொகுதிகளுக்கு மேற்பட்டவை நிர்தமாணிக்கப்பட்டுள்ளன. சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை கட்டடங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.