அடுத்த மாதத்திற்குள் இங்கிலாந்தின்சோதனை முடிவுகள்! கொரோனாவை வெற்றி கொள்ளும் முயற்சியில் உலகெங்கும் ஏராளமான நாடுகள்!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி சுமார் 45 இலட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்து, சுமார் 3 இலட்சம் பேரைப் பலி கொண்டுள்ளது. இந்தத் தொற்றுநோய்க்கு இன்னுமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் உலகமெங்கும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மிகப் பெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்துப் பார்த்து விட்டனர். அம்மருந்து கொரோனா வைரசை தடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன. அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பு மருந்தினால் தடுக்கக் கூடியதாக அமையும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக்களில் கொரோனா வைரஸ் குறைந்ததைக் காண முடிந்தது, மேலும் நிமோனியாவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பாட்டுக்கு ஆளான பின்னர் 6 குரங்குகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தியதில் அந்தக் குரங்குகளுக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்தது. அவற்றுக்கு தடுப்பு மருந்தால் பாதிப்பு ஏற்பட்டதற்கு அறிகுறி எதுவும் இல்லை.
தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகின்ற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து பயனுள்ளதாக இருக்குமா என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் “குரங்குகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தி ஆராய்ந்திருப்பது மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதித்து வருகிற தடுப்பு மருந்து பரிசோதனைக்கு துணையாக அமைந்துள்ளது. இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவப் பேராசிரியர் டொக்டர் பென்னி வார்ட் குறிப்பிட்டார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துத் துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறும் போது “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
அத்துடன் “நிச்சயமாக இதை மனிதர்களுக்கு செலுத்தி தரவைப் பெற வேண்டும். இந்த தடுப்பு மருந்தை பரவலாக பயன்படுத்துவதற்கு முன்பாக இது வேலை செய்கிறது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதை நாங்கள் நிஷரூபித்தாக வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகின்ற இங்கிலாந்தின் மருந்துத்துறை நிபுணத்துவ அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இதுபற்றிக் குறிப்பிடுகையில் “நாங்கள் ஒக்ஸ்போர்ட் குழுவுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் செய்துள்ளோம். சோதனைகள் வெற்றி பெற்று விட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்து விடலாம்” எனக் கூறியது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்துத்துறை பேராசிரியர் ஜோன் பெல் கூறும் போது “தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற சமிக்ஞைக்காக காத்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த தடுப்பு மருந்து சோதனை இங்கிலாந்தில் வெற்றி பெறுகிற போது மதிப்பீடு செய்வதற்கு அடுத்த கட்டமாக கென்யா மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகளையும் அந்த நாட்டு அரசையும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நாடும் என தகவல்கள் கூறுகின்றன.
பேராசிரியர் ஜோன் பெல் தொடர்ந்து கூறுகையில் “இந்த தடுப்பு மருந்தை பெரிய அளவில் தயாரிக்க உலகின் பிற நாடுகளும் தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். உதாரணமாக வளரும் நாடுகளில் தேவை அதிகமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. ஆனால் இது எப்போது முடிவுக்கு வரும்? நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? அதிலுள்ள சவால்கள் என்னென்ன?
இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தெரிவதற்கு நாம் மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இதேசமயம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து ஒன்று அமெரிக்காவில் ஆறு செம்முகக் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி பயனுள்ள விதத்தில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஸ் கொவிட் 2 வகை வைரஸ் பாதிப்பைக் குரங்குகளுக்கு ஏற்படுத்தி, அவற்றுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.
இந்தத் தடுப்பூசியால் அந்தக் குரங்குகளின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது குறைவதைக் காண முடிந்தது. இது கொரோனா தடுப்பூசிக்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
தற்போது மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்து விரைவில் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்ற நம்பிக்கையைப் பலருக்கும் அளித்துள்ளது.
ஆனால் இது மனிதர்கள் மீதும் அதே பலனை அளிக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.
‘ரீஸஸ் மகாக்ஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செம்முகக் குரங்குகள் மனிதர்களைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டவை.
நல்ல வேளையாக நோய் எதிர்ப்பு மேம்படுவதால் ஏற்படும் பக்கவிளைவான எந்த நோயையும் இந்தத் தடுப்பு மருந்து தூண்டவில்லை.
“அப்படி ஏற்பட்டால் அது ‘கோட்பாட்டு ரீதியான அபாயமாகும்’ என்று விவரிக்கிறார் பி.பி.சியின் மருத்துவ செய்தியாளர் பெர்கஸ் வால்ஷ். அதாவது உடலில் ஒரு நோய்க்கு எதிராகப் போராட செலுத்தப்படும் தடுப்பு மருந்து, சிலவேளை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் வேறு சில நோய்களும் உடலில் ஏற்படலாம்.
இதுபோன்ற விளைவுகள் இதற்கு முன் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக சார்ஸ் வைரசிற்கான தடுப்பு மருந்து பரிசோதனைகளை விலங்குகளுக்கு செய்த போது இவ்வாறான விளைவுகள் ஏற்பட்டன. அது சார்ஸ் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் ஒரு பெரும் தடுமாற்றமாகப் பார்க்கப்பட்டது.
தற்போது பரிசோதிக்கப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான ஆய்வின் முடிவுகள் வேறு ஆராய்ச்சியாளர்களால் இன்னும் மறு ஆய்வு செய்யப்படவோ, அறிவியல் சஞ்சிகைகளில் முறையாகப் பதிப்பிக்கப்படவோ இல்லை.
எனினும் இது உயர்ந்த தரத்திலான ஆய்வாகவும், மிகவும் நம்பிக்கை தருவதாகவும் இருப்பதாக லண்டன் பேராசிரியர் ஸ்டீஃபன் ஈவான்ஸ் கூறுகிறார்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.
Thinakaran.lk
Thinakaran.lk