சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 3ஆம் திகதி உத்தரவிட்டு இருந்தது.
மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிக் டாக் நிறுவனம் “இந்தியாவிற்கான உள்ளடக்கத்தைக் கண்காணித்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான விதிகளை மதிக்காத வீடியோக்களை நீக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் நேற்று இரவு Google Play Store-ல் TikTok செயலியை நீக்கியது Google நிறுவனம்! நேற்று (செவ்வாய் கிழமை) இரவில் இருந்து இந்த செயலியை Google Play Store-ல் பெற இயலாது. மேலும், Apple நிறுவனம் இந்த செயலியை நீக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை TikTok செயலியை பற்றி தனிப்பட்ட புகாரை யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் சட்டங்களுக்கு ஒத்துப்போகாததால் இந்த செயலியை Google Play Store-ல் இருந்து நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.