யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட கற்கைகளில் விசேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமானவோர் அடிப்படையைக் கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் இலக்குடன் பரந்தளவிலான தொடர்புபட்ட கற்கைகளுடன் சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை இந்தப் பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்தல் வேண்டும்.
உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.