இந்த வருடத்தின் முதல் 06 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் 06 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக, மஹாமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய்கள் சம்பந்தமான கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு 64 பேர், காலியிலுள்ள மஹாமோதர வைத்தியசாலையில் எச்.ஜ.வி. நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் மொத்தமாக 92 எச்.ஜ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஒருசில மாதங்களுக்கு முன்னர் அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஓரினச்சேர்க்கை பழக்கம் காரணமாக பெரும்பாலான ஆண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதாகவும், எவ்வாறாயினும் இவ்வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது அரிது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளிட்ட குழுவில் அடங்குவோருக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்தோடு, மஹாமோதர வைத்தியசாலையில் எச்.ஜ.வி. நோய் தொடர்பாக குருதி பரிசோதனைகளும் இடம்பெறுவதாகவும், அவர் தெரிவித்தார். (Thinalaran)