உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர்
சிறுவர், முதியோருக்கு பாதுகாப்புடன் கூடிய ஆரோக்கியமான சுழலை உருவாக்க சமாதானம், சகவாழ்வு நல்லிணக்கத்தை உறுத்திப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சிறுவர்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் பிள்ளைகளுக்கும் முதியோர்களுக்கும் பாதுகாப்பான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமாதானம் சகவாழ்வு நல்லிணக்கம் அவசியம்.
உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேடமானதோர் அம்சமாகும். வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே, சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வு காலத்தைக் கழிக்கும் முதுமைப் பருவமும் மனித வாழ்வின் இரு பிரதானங்களுகாம்.
‘அன்பு நிறைந்த நாட்டை உருவாக்குவோம் – பிள்ளைகளை வெற்றிபெறச் செய்வோம்’ என்பதே இம்முறை உலக சிறுவர் தினத்தின் கருப்பொருளாகும். பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான, சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான முன்னேற்றம் அடையப் பெறுகின்ற ஸ்திரமான நாடொன்றைக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது.
இக்கருப்பொருளை எவ்வாறு மிகவும் நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றுவது என நாம் பொறுப்புடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அத்துடன் வயதான முதியோர்களுக்கு அன்பு, பாதுகாப்பு, மதிப்பீட்டினை வழங்கி அவர்களது வாழ்க்கை அனுபவங்கள், அறிவு, திறமைகளை மேலும் சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
பிள்ளைகளைப் போன்றே முதியோரின் வாழ்க்கை எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமாயின் குடும்பப் பிணைப்புகள் பலமானதாக அமைகின்ற, சிறந்த பொருளாதார சமூகப் பின்புலமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய சவால் நம் முன்பே காணப்படுகிறது.
அந்த சவாலினை வெற்றிகொள்ள அரசாங்கம், வெகுசன ஊடகங்கள், சமய மற்றும் சமூக நிறுவனங்கள், சமூகம் ஆகிய அனைத்து தரப்பும் ஒற்றுமையாக, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.