தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு அறிக்கை யொன்று வௌியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையை குழந்தை நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பீ.எம். ஜயவர்தன வௌியிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக குறித்த வயதை உடைய அனைத்து மாணவர்களும் தமது அழகிய இளமைக் காலத்தை இழந்து விடுவதாக அறிக்கை சட்டிக் காட்டுகிறது.
அதிக மன அழுத்தம், அறிகை விருத்தி பாதிப்படைதல், பிள்ளைகளின் இளமைக் கால இழப்பு ஆகியன இப்பரீட்சையின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வயதுக்குப் பொருத்தமின்றி அதிக வீட்டு வேலைகள் வழங்குதல், தாங்கிக் கொள்ள முடியாதளவு அதிக மனஅழுத்தத்தை மாணவர்களுக்கு உருவாக்குகிறது. மன அழுத்தம் காரணமாக பிள்ளைகள் நோயாளியாகின்றனர். இது பிள்ளையின் உடல் இயக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையின் ஞாபக சக்தி மற்றும் கற்றல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ‘ஹிபொகெம்பஸ்’ என்ற மூளையின் ஒரு பகுதி பாதிப்படைந்து எதிர்கால கற்றல் நடவடிக்கைகளும் அதிகம் பாதிப்படைகின்றதாக குறித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை காரணமாக விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பிள்ளை இழக்கின்றது. கெட்டித்தனமான பிள்ளைகளும் இப்பாதிப்பை எதிர் கொள்வதாகவும் அவர்களது கல்வி வாழ்வு பாதிப்படைவதாகவும் அவரது அறிக்கை குறிப்பிடுகிறது.
வருடாந்தம் பரீட்சைக்குத் தோற்றும் மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் பிள்ளைகளில் பதினைந்தாயிரம் பேரே குறிப்பிட்ட வெட்டுப் புள்ளிகளைப் பெறுகின்றனர் என்று குறிப்பிடும் அறிக்கை இப்பரீட்சையின் நன்மை தீமைகளை ஒப்பு நோக்குகின்றது.
இது 2 நன்மைகளையும் 8 பாரிய பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் இப்பரீட்சை குறித்து உடனடியாக தீர்மானம் எடுப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவது அல்லது வேறொரு வகுப்பில் நடத்துவது என்ற பல தீர்மானங்களை எடுத்த போதும் அதனை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள் காரணமாக கைவிட்டுள்ளது.
கடந்த வருடம் கல்வி அமைச்சர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயமில்லை. அவரவர் விருப்பத்துக்குரியது என்றும் அது தொடர்பான மேலதிக அறிவித்தல்கள் விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.
(ஜெஸா)