தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதி வருட வெளியகப் பரீட்சை குறித்த தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று தெரியவருகின்றது.
பரீட்சைகள் திணைக்களம் நடாத்தும் இப்பரீட்சைகள் மூன்று தடவைகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அப்பரீட்சைகளை எப்போது நடாத்துவது என்பது குறித்த தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை என்று தேசிய கல்வியியல் கல்லூரி ஒன்றின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில் எதிர்வரும் 6 ஆம் திகதியின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாகி ஓரளவு இயல்பு நிலை ஏற்படின் பரீட்சை நடாத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முஸ்லிம் மாணவர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் றமழான் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு பரீட்சையை நடாத்தி முடித்து விடுவதற்கான தேவை நிலவுகதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இப்பரீட்சை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் உள்ளகப் பரீட்சைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள்பட்டிருந்தன.
எனினும் வெளியகப் மதிப்பீட்டுப் பரீட்சைகள் காலம் தாழத்தி நடைபெற்றால் அதிலிருந்து பத்து நாட்கள் கழித்து உள்ளகப் பரீட்சை நடாத்துவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அவ்விரிவுரையாளர் தெரிவித்தார்.
ஒரு வேளை வெளியகப் பரீட்சைகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறாது போனால் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல எதிர்வரும் 14 ஆம் திகதிகளில் உள்ளகப் பரீட்சை நடைபெறும் என்றும் அதன் பின்னர் பொருத்தமான சந்தர்ப்பத்தில் வெளியகப் பரீட்சைகள் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.