தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளை நியமனம் செய்வதற்கான தகவல்கள் சேகரிப்பை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த தகவல் சேகரிப்பு மார்ச் 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒன்லைனில் இடம்பெறுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் போது தாம் நியனமம் பெற விரும்பும் பாடசாலைகளின் தெரிவுப் பட்டியலை சமர்ப்பிக்கும் படியும் வேண்டப்படுகிறது. தற்போதைய ஒன்லைன் விண்ணப்பத்தில் பாடசாலைகள் தெரிவு செய்வதற்காக வழங்கப்படுகின்றன. பட்டியற்படுத்தப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாடசாலைகளைத் தெரிவு செய்ய முடியாது. எனினும் பட்டியலிடப்பட்ட பாடசாலைகளில் தமது பிரதேசத்திற்குரிய பாடசாலைகள் எதுவுமில்லை என டிப்ளோமாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். தூரப் பிரதேசப் பாடசாலைகளைத் தேர்வு செய்த பின்னர், நியனம் அப்பாடசாலைகளை மையப்படுத்தி வழங்கப்பட்டால், தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு தொழில் செய்வது என்று மாணவர்கள் அங்கலாய்க்கின்றனர்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் போது, பிரதேசத்தில் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையிலேயே உள்ளீர்ப்பு இடம்பெற்றது. எனினும் நியனமத்திற்கான பாடசாலைத் தெரிவில் பிரேதசப் பாடசாலைகள் எதனையும் காணவில்லை என டிப்ளோமாதாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.