யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் இதயங்களில் தாங்கமுடியாத வேதனையை உருவாக்கியுள்ளது. இறுதி யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவாலயமானது பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட பேரினவாத அரசின் துணையுடனேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
2009 இறுதி யுத்தத்தின்போது மனிதப் பேரவலம் நடைபெற்றதன் அடையாளத்தை மறைக்க முயலும், இந்த இனவாத அரசின் செயற்பாட்டையும், அதற்குத் துணைபோகும் அரச இயந்திரங்களின் செயற்பாடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் இனத்தின் கலாசாரங்களோடும், உணர்வுகளோடும், தமிழ் மக்களின் பண்பாட்டுத் தனித்துவங்களோடும் பின்னிப்பிணைந்த கல்விக் கூடமாகவே இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், அங்கிலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமையானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை நொருக்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இனவாத அரசின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டும் வேளையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் அடிப்படைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள அரசாங்கம், அதனூடாக மக்களின் ஜனநாயக ரீதியான வெகுஜன எதிர்ப்புக்களையும் அடக்க முயன்று வருகின்றது.
பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட மக்கள் சமூகங்களை, மிலேச்சத்தனமான இனவாத செயற்பாடுகளினால் துன்புறுத்திவரும் இந்த அரசு, ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்களையும் பொய்யான காரணங்கள் மூலம் அடக்கியாள முற்படுகின்றமை கண்டனத்துக்குரிய விடயமாகும்.
நாளை வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் ஆரம்பநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாரம்பரிய இனமொன்றின் அடையாளத்தினை இரும்புக் கரம்கொண்டு அடக்க நினைப்பதற்கு எதிர்வினையாற்ற வேண்டியதும், குரல் கொடுக்க வேண்டியதும் கல்விச் சமூகத்தின் பொறுப்பான கடமையாகவும் உள்ளது.
எனவே – பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் இணைந்து ஒற்றுமையாக மேற்கொள்ளவுள்ள அனைத்து போராட்டங்களுக்கும், நாளைய தினம் வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது.
நாளைய தினம் நடைபெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைத்து, போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.